

கிர்கிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மோடி, விமானத்தில் செல்லும்போது பாகிஸ்தான் வான்வெளிக்கு பதிலாக ஈரான் வழியாக செல்வது என மத்திய வெளியுறவு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலக்கோட்டில் சென்று தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டு வந்தது. இந்த சம்பவத்துக்குப்பின் பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியில் வெளிநாட்டு விமானங்கள் பறப்பதற்கு கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி முதல் தடை விதித்தது.
இந்தியாவில் இருந்து தெற்கு நோக்கிவரும் 11 வழித்தடங்களில் 2 வழித்தடத்தை மட்டுமே பாகிஸ்தான் தற்போது அனுமதித்துள்ளது. மற்ற வழித்தடங்களுக்கு அனுமதியளிக்கவில்லை.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்செக் நகரில் வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
பாகிஸ்தான் வான்வழியாக பிரதமர் மோடியின் விமானம் செல்ல அனுமதிக்குமாறு இந்திய அரசு பாகிஸ்தான் அரசிடம் கோரிககை விடுத்தது.
பாகிஸ்தான் வழியாகச் செல்லாமல் இந்திய விமானம் மாற்றுப்பாதையில் சென்றால் கிர்கிஸ்தான் செல்ல நீண்ட தொலைவும், நேரமும் ஆகும்.
இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் கொள்கை ரீதியாக ஏற்பதாகவும், முறைப்படி பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது.
இந்தநிலையில் கிரிகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக செல்லாது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வான்வெளிக்கு பதிலாக ஈரான் அல்லது ஓமன் வழியாக செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறுகையில் ‘‘கிரிகிரஸ்தான் மாநாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடியின் விமானம் இரு வழிகளில் செல்லும் வாய்ப்பு குறித்து ஆலோசனை நடத்தினோம். ஆனால் இறுதியாக ஈரான், ஓமன் வழியாக செல்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.