Published : 25 Jun 2019 04:57 PM
Last Updated : 25 Jun 2019 04:57 PM

கேரளாவிலிருந்து பசுக்களைக் கொண்டு சென்றவர் டெல்லியில் மர்ம மரணம்

கேரளா மாநிலம் செங்கன்னூரைச் சேர்ந்த விக்ரமன் என்ற நபர் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஆசிரமம் ஒன்றிற்கு பசுக்களை எடுத்துச் சென்ற நிலையில் மர்மமான முறையில் டெல்லியில் இறந்து கிடந்தது பரபரப்பாகியுள்ளது.

 

இதுதொடர்பாக விக்ரமன் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் செங்கண்ணூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

உறவினர் கொடுத்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது:

 

இடுக்கி மாவட்டம் கட்டப்பனாவிலிருந்து விக்ரமன் என்பவர் வேச்சூர் பசுமாடுகளுடன் உ.பி. மதுராவுக்குப் புறப்பட்டுள்ளார். வேச்சூர் பசுமாடுகளை மதுராவில் உள்ள ஆஸ்ரமத்துக்குக் கொண்டு சென்றார். இவர் டெல்லிக்கு ஜூன் 21ம் தேதி சென்றடைந்துள்ளார். ஆனால் அங்கிருந்து தன் குடும்பத்தினருக்கு அவர் தான் ரத்தமாக வாந்தி எடுத்ததாகவும் தான் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

அடுத்த நாள் தன் மகனை அழைத்து உடனடியாக டெல்லி வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அடுத்த நாளே மகன் டெல்லிக்குச் சென்றார். மகன் தந்தையை போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது தெரியாத நபர் ஒருவர் போனை எடுத்து தந்தை இறந்து விட்டார் என்று கூறியுள்ளார். பிறகு டெல்லி விமான நிலையம் அருகேயுள்ள ஹோட்டலில் தங்குமாறும் அங்கு தந்தையின் உடல் ஒப்படைக்கப்படும் என்றும் மகனுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

இந்நிலையில் செங்கண்ணூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுதிலால் என்பவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது  “போலீஸ் சர்ஜன் தலைமையில் தற்போது ஆலப்புழா அரசு மருத்துவமனையில் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தவுடன் நாங்கள் இது தொடர்பாக மேலும் தகவல்களை அளிக்கிறோம்” என்றார்.

 

பசுக்களை ஆசிரமத்துக்கு எடுத்துச் சென்றவர் மர்மமான முறையில் இறந்ததும், புகாரின் அடிப்படைகளும் கடும் சந்தேகத்தை எழுப்பிய நிலையில் இதன் பின்னணியில் இருக்கும் சிலபல உண்மைகள் வெளிவரலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x