

கர்நாடகாவில் ஆட்சி நீடிப்பது கடினம், விரைவில் தேர்தல் வரும் என மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா கூறியுள்ளார்.
கர்நாடாகவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சரவை பங்கீடு, துறை ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. அமைச்சர் பதவி கிடைக்காத ரமேஷ் ஜார்கிஹோளி, ரோஷன் பெய்க், சுதாகர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலரிடம் பாஜக தரப்பில் தங்கள் கட்சியை ஆதரிக்குமாறு குதிரை பேரம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இதனால் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஒருபுறம் பாஜக மற்றொரு புறம் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் என இருதரப்பு நெருக்கடியையும் சந்திக்க வேண்டிய சூழலில் குமாரசாமி உள்ளார். இந்த நெருக்கடியை அவ்வப்போது அவர் வெளிப்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா செய்தியாளர்களிடம் இதுபற்றி கூறியதாவது
“கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்கள் தற்போது நடந்துகொள்வதை பார்த்தால் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நீடிப்பது கடினம். இந்த தலைவர்களின் கருத்துக்கள் என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளன. இது தொடர்பாக நான் ராகுல் காந்தியிடமும் கூறியுள்ளேன். கர்நாடகாவில் கூடிய விரைவில் தேர்தல் நடைபெறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.