‘‘சரியான நேரத்துக்கு அலுவலகம் வரவேண்டும்; வீட்டில் இருந்து வேலை பார்க்கக்கூடாது’’ - அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

‘‘சரியான நேரத்துக்கு அலுவலகம் வரவேண்டும்; வீட்டில் இருந்து வேலை பார்க்கக்கூடாது’’ - அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
Updated on
1 min read

மத்திய அமைச்சர்கள் ‘சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்கு வரவேண்டும், வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். முதல் 100 நாட்களில் விரைவாக செயல்படுத்தவுள்ள திட்டங்களின் பட்டியலை அனுப்புமாறும் அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.  இந்தக்கூட்டத்தில் முத்தலாக் தடை புதிய மசோதா வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பு தல் அளித்துள்ளது.

இதுமட்டுமின்றி அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு அமைச்சர்களும் தங்கள் துறை சார்ந்த திட்டங்களையும், தங்கள் இலக்குகளை விவரமாக பேசினர்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட், பொருளாதார இலக்கு தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த விவரங்களை எடுத்துரைத்தார். ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து அமைச்சர் பியூஷ் கோயல் விரிவாக பேசினார்.

இதுபோலவே முந்தைய அரசியல் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்த, தற்போதைய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நாடாளுமன்ற செயல்பாடு தொடர்பாக தான் தயாரித்து வந்த திட்ட விளக்கத்தை எடுத்துரைத்தார்.

பின்னர் , அமைச்சரவைக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்தில் அவர் பேசியதாக கூறப்படுவதாவது:

அமைச்சர்கள் அனைவரும் சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்கு வரவேண்டும். அலுவலகம் வந்தவுடன், புதிய பணிகள் குறித்து அமைச்சக அதிகாரிகளுடன் விவாதிக்க வேண்டும். வீட்டில் இருந்து பணி செய்வதை தவிர்க்க வேண்டும். திட்டங்கள் குறித்து இணையமைச்சர்களுடன் விவாதிக்க வேண்டும். முக்கிய ஆவணங்களை அவர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் விவாதித்தே அனைத்து விஷயங்களை அமைச்சரவைக்கு பரிந்துரைக்க வேண்டும்.

தங்கள் தொகுதியில் மக்களை சந்திக்க வேண்டும். கட்சி எம்.பி.க்கள், பொதுமக்களுடன் வழக்கமான சந்திப்புகளை தொடர வேண்டும். அமைச்சர்கள் என்பவர்கள் மற்ற எம்.பிக்களை போலவே மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக்கூட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான இலக்கை நிர்ணயிக்குமாறும், முதல் 100 நாட்களில் விரைவாக செயல்படுத்தவுள்ள திட்டங்களின் பட்டியலை அனுப்புமாறும் அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in