Published : 14 Jun 2019 06:39 PM
Last Updated : 14 Jun 2019 06:39 PM

மேற்குவங்க வன்முறையைக் கண்டித்து ஜூன் 17ம் தேதி மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்

வரும் ஜூன் 17-ம் தேதி அரசு, தனியார் என அனைத்து மருத்துவர்களும் நாடி தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

 

கொல்கத்தாவில் அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து வரும் 17-ம் தேதி அரசு, தனியார் என அனைத்து மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக இந்திய மருத்துவர் சங்கம், உலக மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக இந்திய மருத்துவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அத்தியாவசிய சேவைப்பணியில் இல்லாத மருத்துவர்கள் நாள் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். வரும் 15, 16-ம் தேதிகளில் கறுப்பு பட்டை அணிந்து பணியாற்றவும், தர்ணா, அமைதிப்பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

 

போராட்டம் நடைபெறும் தேதிகளில் அவசர சிகிச்சைப்பிரிவு தொடர்ந்து இயங்கும். திங்கள் கிழமை நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதுமுள்ள மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் திங்கள்கிழமை வரை தொடரும்” என்று கூறப்பட்டுள்ளது.

 

கொல்கத்தா உயர் நீதிமன்றம் மருத்துவர்கள் போராட்டத்திற்கு மேற்கு வங்க அரசு தீர்வு காண வேண்டும். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? இது குறித்து 7 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் மருத்துவமனைகளில் வன்முறை தொடர்பாக மருத்துவர் சங்கம் கூறும்போது, “மருத்துவமனை வன்முறையில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். வழக்குகள் பதிவு செய்யப்படுவதையும், குற்றவாளிகள் கைது செய்யப்படுவதையும் உறுதி செய்ய போக்சோ சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மருத்துவமனைகள் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு முறையான பாதுகாப்பு வழங்குவது மாநில அரசின் கடமையாகும்” என்று ஐஎம்ஏ தலைமைச் செயலாளர் ஆர்.வி. அசோகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x