

மத்தியில் 2047-ம் ஆண்டு வரை மோடியின் ஆட்சியே தொடரும், காங்கிரஸின் முந்தைய சதானையை பாஜக முறியடிக்கும் என பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறினார்.
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக நடந்தது. தேர்தல் முடிவில் 303 இடங்கள் பெற்ற பாஜக, பெரும்பான்மையுடன் 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வென்று இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறவில்லை.
திரிபுரா மாநிலத்தில் இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வென்றது. இந்த வெற்றியை தொடர்ந்து திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று பாஜக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மக்களவைத் தேர்தலில் பாஜவுக்கு 6 கோடி புதிய வாக்குகள் கிடைத்துள்ளன. 2022-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்குவோம். அனைத்து மக்களுக்கும் அனைவருக்கும் வீடு வழங்குவது முக்கிய இலக்கு. வேலை வாய்ப்பின்மை பிரச்சனைக்கு தீர்வு காண்பது பாஜக அரசின் இரண்டாவது இலக்கு.
நாடு சுதந்திரமடைந்தது முதல் 1977-ம் ஆண்டு வரை வேறு எந்த கட்சியும் அல்லாமல் காங்கிரஸ் மட்டுமே ஆட்சி நடத்தியது. 27 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்ததே தற்போதுவரை சாதனையாக உள்ளது.
ஆனால் இந்த சாதனையை பிரதமர் நரேந்திர மோடி முறியடிப்பார். நாடு சுதந்திரமடைந்ததன் நூற்றாண்டு விழா கொண்டாடும் 2047ம் ஆண்டு வரை பிரதமர் மோடியின் ஆட்சி தொடரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு ராம் மாதவ் பேசினார்.