Last Updated : 21 Jun, 2019 02:22 PM

 

Published : 21 Jun 2019 02:22 PM
Last Updated : 21 Jun 2019 02:22 PM

கேள்வி நேரத்தின்போது பேச அனுமதி மறுப்பு :மக்களவையில் கனிமொழி, சுப்ரியா எம்.பி.க்கள் எதிர்ப்பு

கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்விகள் கேட்க அனுமதி வழங்காததைக் கண்டித்து, திமுக எம்.பி. கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார். அதில் பட்டியலிடப்பட்ட கேள்வியான போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதற்கு ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்.

அப்போது ஸ்மிருதி இரானி பேசியபோது, அந்த பதிலில் இருந்து துணைக் கேள்விகள் கேட்க தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் முயன்று எழுந்தனர். ஆனால், அதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார்.

அப்போது பேசிய சுப்ரியா சுலே, " இது மிகவும் முக்கியமான கேள்வி, நீங்கள் ஒரு துணைக் கேள்விகூட கேட்க அனுமதி மறுக்கிறீர்கள். ஆனால் இந்த விஷயத்தில் துணைக் கேள்விகள் கேட்க வேண்டும்" என்று பேசினார்.

சுப்ரியா சுலேவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் சிலர் துணைக் கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால், அதற்கு அனுமதி  மறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, " நாடாளுமன்ற அலுவல்குழுதான்  கேள்வி குறித்து முடிவு செய்கிறது. ஆதலால், கேள்வி நேரத்தின் போது, அதிகமான கேள்விகள் கேட்க அனுமதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அலுவல் குழுவிடம் ஆலோசனை தெரிவிக்கலாம்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x