மக்களவையில் புதிதாக முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல்

மக்களவையில் புதிதாக முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல்
Updated on
1 min read

முஸ்லிம் பெண்களைப் பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று மத்திய அரசால் புதிதாகத் தாக்கல் செய்யப்படுகிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு முத்தலாக் அவசரச் சட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவந்தது. அதற்கு மாற்றாக, இப்போது, மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள முத்தலாக் மசோதாவுக்கு முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) மசோதா, 2019 என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 16-வது மக்களவையின் போது முத்தலாக் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

ஆனால், மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு போதுமான பலம் இல்லாத காரணத்தால், அது நிறைவேற்றப்படவில்லை. இதனால், 16-வது மக்களவை முடிந்த நிலையில், அந்த  முத்தலாக் மசோதாவும் மாநிலங்களவையில் காலாவதியாகிவிட்டது.

இந்நிலையில், முத்தலாக் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்த நிலையில், அதைச் சட்டமாக்கும் முயற்சியில் இன்று முத்தலாக் மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்கிறது.

இதற்கு முன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருமுறை முத்தலாக் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. ஆனால், மக்களவையில் நிறைவேற்ற முடிந்தாலும், மாநிலங்களவையில் நிலுவையில் வைக்கப்பட்டது.

இந்த மசோதாவின்படி, முஸ்லிம் பெண்களுக்கு உடனடியாக தலாக் கூறி அவர்களை ஒதுக்கி வைப்பது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முத்தலாக்கைப் பின்பற்றும் கணவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கணவனைக் கைது செய்யும் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் கணவன் கைது செய்யப்பட்டால், மாஜிஸ்திரேட் முன் மனைவி ஒப்புதலின் பெயரில் ஜாமீன் பெற முடியும்.

முத்தலாக் தடை மசோதாவில் கணவரைக் கைது செய்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் முறைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த ஷரத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால், மாநிலங்களவையில் நிலுவையில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த மழைக்காலக் கூட்டத்தில் 10 அவசரச் சட்டங்களைச் சட்டமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 10 அவசரச் சட்டங்களின் நகல்களும் நேற்று இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த 10 அவசரச் சட்டங்களும் கடந்த 16-வது மக்களவை காலாவதியாகும் முன் கடைசிக் கூட்டத் தொடரின்போது தாக்கல் செய்யப்பட்டவை. 45 நாட்களுக்குள் இந்த அவசரச் சட்டத்தை மசோதாவாகத் தாக்கல் செய்து நிறைவேற்றாவிட்டால், காலாவதியாகிவிடும் என்பதால், இப்போதே மத்திய அரசு தாக்கல் செய்துவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in