

புதிய கல்வி கொள்கையின் வரைவை, பொதுமக்கள் படித்து ஆய்வு செய்து, அதுபற்றி விவாதிக்க வேண்டும், அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டாம் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் இன்று (02.06.2019) இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற, கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான இரண்டு நாள் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய அவர், புத்தக பைகளின் சுமையை குறைத்தல், விளையாட்டை ஊக்குவித்தல், அறநெறிகளை போதித்தல், அறிவியல் மற்றும் பகுத்தறிவு உணர்வு, வரலாறு மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு போன்றவையும் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.
தொழில் துறையினருக்கும், கல்வித் துறைக்கும் இடையிலான இனிய நட்புறவு, கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க மிகவும் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்களின் கலாச்சாரம் பற்றிய ஆராய்ச்சியை பெரிய அளவில் ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கான ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், நிதியுதவி அளிக்கவும், பெரிய தொழில் நிறுவனங்கள் சிறப்பு நிதியம் ஒன்றை ஏற்படுத்துமாறு வலியுறுத்திய குடியரசுத் துணைத் தலைவர், வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறனை மாணவர்களுக்கு வழங்கக் கூடிய வகையில், கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
உலகளவில் மாறிவரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், நமது கல்வி முறையில் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திரு வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். உலகின் 100 முன்னணி கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற முடியாதது குறித்து, இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆத்ம பரிசோதனை செய்து, கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலினப் பாகுபாடு அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த வெங்கையா நாயுடு, நமது கல்வி முறை, மாணவர்களை சமூகத்தின் பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றுவதாக இருப்பதோடு, மாணவர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அமைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
முற்காலத்தில் “விஷ்வகுரு” என்று கருதப்பட்ட இந்தியா, மீண்டும் உலகளவில் பிரசித்திப் பெற்ற அறிவாற்றல் மற்றும் புதுமைக்கான மையமாக திகழச் செய்ய வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார்.