

தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி, ஏற்கெனவே மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கக்கூடிய நீட் தொடர்பான இரு தீர்மானங்களை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என திருச்சி சிவா மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் திமுக எம்.பி.திருச்சி சிவா பேசியதாவது:
''அகில இந்திய அளவில் சுமார் 13 லட்சம் மாணவர்கள் இந்த முறை நீட் தேர்வு எழுதிய நிலையில், அவர்களில் வெறும் 6 லட்சம் பேர் மட்டும்தான் தேர்வாகியுள்ளனர். இந்த 6 லட்சம் பேரும் தனியாக கோச்சிங் சென்டர்களுக்குச் சென்றவர்கள்.
கோச்சிங் சென்டர்களுக்குச் சென்று பயின்ற ஒவ்வொரு மாணவரும் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார். அப்படியென்றால், இந்த கோச்சிங் சென்டர்கள் நீட் தேர்வை வைத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளன. இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்த முடியாத ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் 5 மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் உயிரிழந்தனர். எனவே, தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றி, ஏற்கெனவே மத்திய அரசுக்கு அனுப்பிய நீட் விலக்கு தொடர்பான இரு தீர்மானங்களை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அத்துடன், தமிழக அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என நிறைவேற்றிய தீர்மானத்தின்மீது, மத்திய அரசு எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது''.
இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.