வலுவான வெளியுறவுக் கொள்கை கொண்ட மத்திய அரசு: அமித் ஷா

வலுவான வெளியுறவுக் கொள்கை கொண்ட மத்திய அரசு: அமித் ஷா
Updated on
1 min read

கொல்கத்தாவில் பேரணி ஒன்றில் உரையாற்றிய பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் 100 நாட்கள் ஆட்சி பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

நாட்டின் எல்லைப் பகுதி பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பிரதமர் மோடி தெளிவுபடக் கூறியிருப்பதாக பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

"பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது அனைத்து சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தியா மற்ற நாடுகளையும் சேர்த்துக் கொண்டு முன்னேற விரும்புகிறது என்ற செய்தியை தெள்ளத் தெளிவாக அறிவுறுத்தியது.

இதற்காக வெளியுறவுச் செயலர்கள் மட்ட பேச்சு வார்த்தைகளுக்கு முன்னெடுப்பு செய்யப்பட்டது. ஆனால் அந்நாட்டுத் தூதர் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து பிரதமர் மோடி உடனடியாக பாகிஸ்தானுடனும், பிரிவினைவாதத் தலைவர்களுடனும் பேச்சு வார்த்தை இல்லை என்று கண்டிப்புடன் மறுத்தார்.

நீண்ட காலத்திற்குப் பிறகு இவ்வளவு வலுவான வெளியுறவுக் கொள்கையுடன் கூடிய பிரதமர் நமக்குக் கிடைத்துள்ளார். நம் நாடு மற்றும் அதன் எல்லைப்பகுதிகளின் பாதுகாப்பு தவிர வேறு எதுவும் தனக்கு பெரிய விஷயமில்லை என்பதை மோடி தெளிவாகவே அறிவித்து விட்டார். நாட்டின் நலன்கள் மீது அக்கறை இல்லையா, பேச்சு வார்த்தைகள் இல்லை என்று அவர் கூறிவிட்டார்.

இந்த 100 நாட்கள் ஆட்சியில், இந்த அரசும், பிரதமர் மோடியும், இந்த நாட்டிற்கும் மக்களுக்கும் தேவையான மாற்றம் செய்யும் நபர் இவராகத்தான் இருக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளார்.

விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விலைவாசியும் மெதுவே கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது.

மேலும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று அமித் ஷா, கொல்கத்தாவில் பேரணி ஒன்றில் பேசுகையில் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in