

அமெரிக்காவில் நடைபெறும் உலகத்தமிழ் மாநாட்டிற்கு செல்ல ஏழு பேருக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக தமிழக எம்.பி.க்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சமூக அந்தஸ்து, நிதிலையை காரணம் காட்டி தமிழகத்தின் ஏழு தமிழ் ஆய்வாளர்களுக்கு அமெரிக்கா செல்ல அந்நாட்டு தூதரகம் விசா மறுத்திருந்தது. இவர்கள் ஜூலை 4 முதல் 7 வரை அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெறவிருக்கும் 10 ஆம் உலகத்தமிழ் மாநாட்டில் தம் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க இருந்தவர்கள்.
இதன் மீதான செய்தி நேற்று முன் தினம் ‘இந்து தமிழ்’ நாளேட்டில் விரிவாக வெளியாகி இருந்தது. இதை தம் கவனத்திற்கு எடுத்த தமிழகத்தின் மக்களவை எம்பிக்கள் மாணிக் தாக்கூர், டாக்டர்.எஸ்.செந்தில்குமார், கே.நவாஸ்கனி மற்றும் டாக்டர்.ஏ.செல்லக்குமார் ஆகியோர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்பியான மாணிக் தாக்கூர் தனது கடிதத்தில், ‘இவர்கள் தற்காலிகப் பணி செய்வதால் அவர்களுக்கு சமூக அந்தஸ்து இல்லை என்பதை காரணம் காட்டி விசா மறுப்பது தவறு. இது அந்த தமிழ் ஆய்வாளர்கள் தம் உயர்கல்வியை தொடர முடியாமல் பாதிக்கும்.’ எனத் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் தொகுதியின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் எம்பியான நவாஸ்கனி எழுதியதில், ‘விசா மறுக்கப்பட்ட அனைவருக்கும் மாநாட்டு நிர்வாகமே பயணச்செலவை அளிப்பதால் அவர்களின் நிதிநிலை பற்றிய பேச்சுக்கு இடமில்லை. எனவே, அமெரிக்கா தூதரகத்திடம் பேசி அனைவரையும் மாநாட்டில் தமிழாய்வு கட்டூரையை சமர்ப்பிக்க வழி செய்ய வேண்டும்.’ என வலியுறுத்தியுள்ளார்.
தர்மபுரியின் திமுக எம்பியான டாக்டர்.எஸ்.செந்தில்குமார் எழுதிய கடிதத்தில், ‘அனைவருமே தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்பதால் மாநாட்டிற்கு பின் அவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதப் பணிக்காக தங்கிவிடும் வாய்ப்புகள் தெரியவில்லை. இதை குறிப்பிட்டு மத்திய அரசு அவர்களுக்கு விசா அனுமதி பெற்றுத்தர வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி தொகுதியின் காங்கிரஸ் எம்பியான டாக்டர்.ஏ.செல்லக்குமார் எழுதியதில், தம் ஆய்வுக்கட்டூரைகளை சமர்ப்பிக்க முடியாமல் தவிக்கும் இளம் ஆய்வாளர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். இவர்களுக்காக பேசி விசா கிடைக்க வழிசெய்வதால் சர்வதேச அளவில் தமிழ் மொழியை வளர்க்க முடியும்.’ எனக் கூறியுள்ளார்.
தமிழக எம்பிக்கள் அனுப்பிய ஏழு பெயர்களில் ஆர்.சந்தானகிருஷ்ணன், எம்.வெண்ணிலா, ஜி.பாலாஜி, கே.கவிதா, கே.கவிமணி, பி.அமுதா மற்றும் மதுபாஷினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு, சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் கடந்த 18 முதல் 22 ஆம் தேதி அரை விசாவிற்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றது.
தமிழரும் மத்திய வெளியுறத்துறை அமைச்சருமான ஜெய்சங்கர் இந்த தமிழ் ஆய்வாளர்களுக்காக பேசி விசா கிடைக்க ஏற்பாடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.