

பாலக்கோட் தாக்குதலின்போது விமானப்படை பயன்படுத்திய குண்டுகளை இஸ்ரேலிடம் இருந்து வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்கிறது.
ஜம்மு காஷ்மீரில், புல்வாமாவில் பிப்ரவரியில் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது இந்திய விமானப்படை பதிலடித் தாக்குதல் நடத்தியது.
இதில் 350-க்கும் மேற்பட்ட தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த தாக்குதலில் இந்தியாவின் மிராஜ்-2000 ரக போர்விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்ட குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.
இந்தநிலையில், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு முதல் ராணுவ தளவாடங்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
இதன்படி பாலக்கோட்டில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட குண்டுகள் வாங்குவதற்கு இஸ்ரேல் நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 300 கோடி ரூபாய் செலவில் 2000 குண்டுகள் வாங்கப்படஉள்ளது.
அவசர தேவை கருதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இந்த ஆண்டுக்குள் குண்டுகள் அனைத்தும் சப்ளை செய்யப்பட்டு விடும் என ராணுவ வட்டார்ங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் மிராஜ் ரக போர் விமானங்கள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பாலக்கோட் பகுதியில் 3 இடங்களை குறி வைத்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
சுமார் 80 கிலோ எடை கொண்ட இந்த குண்டுகள் 900 கிலோ இரும்பு உருக்கு மற்றும் 80 வெடிமருந்து பொருட்களை கொண்டதாக இருக்கும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் விதத்தில் இந்த ராணுவ தளவாடங்கள் வாங்கப்படுவதாக ராணுவ வட்டார்ங்கள் தெரிவித்துள்ளன.