

2006 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள 4 பேருக்கு மும்பை உயர் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) ஜாமீன் வழங்கியது.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தான் சிங், லோகேஷ் ஷர்மா, மனோகர் நர்வாரியா மற்றும் ராஜேந்திர சவுத்ரி நீதிபதிகள் ஐ.ஏ.மஹந்தி மற்றும் ஏ.எம்.பட்கர் ஆகியோர் அடங்கிய ஒரு பிரிவு அமர்வு இதற்கான உத்தரவை இன்று வழங்கியது.
ஜாமீன் உத்தரவின்போது நீதிபதிகள் கூறுகையில், ''மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. மனுதாரர்கள் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பிணையில் விடுவிக்கப்படுவார்கள்.
சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் ஒவ்வொரு நாளும் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும். அவர்கள் இவ்வழக்கு தொடர்பான சான்றுகளையோ அல்லது சாட்சிகளையோ தொடர்பு கொள்ளக்கூடாது.''
இவ்வாறு ஜாமீன் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.
2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதில் இருந்து சிறையில் உள்ள இந்நான்கு பேரும், 2016ல் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அதே ஆண்டு ஜூனில் அவர்களின் ஜாமீன் மனுவை நிராகரித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் ஜாமீனுக்காக அவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடினர்.
வழக்கு கடந்துவந்த பாதை
2006 செப்டம்பர் 8ல் நாசிக் அருகே உள்ள மாலேகானில் ஹமீதியா மசூதிக்கு அருகே ஒரு கல்லறைக்கு வெளியே நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 37 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
மகாராஷ்டிராவின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை பிரிவு போலீஸார் ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்தபோது 9 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேசிய புலனாய்வு முகமை என்டிஏ வழக்கின் முந்தைய பாதையைப் பின்பற்றி விசாரணை நடத்தியது.
அதனோடு, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருடன் சிங், ஷர்மா, நர்வாரியா மற்றும் சவுத்திரி ஆகிய நான்கு பேர் மீதும் புதியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 9 பேரையும் விடுவிக்கும் தேசிய புலனாய்வு முகமையின் நிலைப்பாட்டை 2016ல் சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அவர்களை விடுவித்தது.
ஜாமீன் கோருவதைத் தவிர, சிங் மற்றும் பலர் ஒன்பது பேரை குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பதற்கு ஆட்சேபனைத் தெரிவித்து சவால் விடுத்துள்ளனர். மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட இந்நால்வரும் சிறப்பு நீதிமன்றம் தங்களையும் விடுவிக்க தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்ததற்கும் ஆட்சேபனை தெரிவித்து சவால் விடுத்துள்ளனர். இது தொடர்பான இவர்களது மனுக்களை மும்பை உயர்நீதிமன்றத்தில் பின்னர் விசாரிக்கப்படும்.