

பிரதமர் மோடி தலைமையில் 2-வது முறையாக பாஜக அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து, 6 மத்திய அமைச்சரவை குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டன. மேலும் 2 புதிய குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்கள் ஆகிய 2 குழுக்களில் மட்டுமே பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு இடம் வழங்கப்பட்டது.
அதேநேரம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு 8 குழுக்களில் இடம் வழங்கப் பட்டுள்ளதால் அவருக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக நேற்று காலையில் தகவல் வெளியானது.
இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழுவுக்கு ராஜ்நாத் சிங் தலைமை வகிப்பார் என நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. இது தவிர, மிகவும் முக்கியமான அரசியல் விவ காரங்கள், புதிதாக அமைக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உட்பட மொத்தம் 6 அமைச்சரவை குழுக்களில் ராஜ்நாத் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.