Last Updated : 17 Jun, 2019 12:00 AM

 

Published : 17 Jun 2019 12:00 AM
Last Updated : 17 Jun 2019 12:00 AM

உட்கட்சி சண்டையை ராகுல் காந்தி இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் மொய்லி வேண்டுகோள்

காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சி சண்டையை ராகுல் காந்தி இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மொய்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. மொத்தம் உள்ள 543-ல் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை ஏற்று ஒன்றரை ஆண்டுதான் ஆகிறது. அதற்குள் அவர் பதவி விலகுவது சரியல்ல. திறமையை நிரூபிக்க அவருக்கு இன்னும் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். குறிப்பாக ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநில சட்டப்பேரவைகளுக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ராகுல் தனது முடிவை மாற்றிக் கொண்டு உடனடியாக தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்க இது சரியான தருணம் அல்ல. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு சரியானவர்களை பொறுப்பாளர்களாக நியமிப்பதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும். சிறந்த வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் ராகுலே முன்னின்று செயல்பட வேண்டும்.

இதுபோல கட்சிக்குள் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை செய்ய வேண்டும். அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும். அப்போதுதான் கட்சிக்குள் புது ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது என்பதை இந்த நாட்டுக்கும் உலகத்துக்கும் தெரிவிக்க முடியும். கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாக கருதப்படும் நிலையில், புது ரத்தம் பாய்ச்ச வேண்டியது அவசியம். இதைத்தான் ராகுல் செய்ய வேண்டும். அவரால் மட்டும்தான் இதைச் செய்ய முடியும். இதைச் செய்தால் கட்சிக்கு புத்துயிரூட்ட முடியும்.

மேலும் உட்கட்சி சண்டையை எவ்வித கருணையும் இல்லாமல் உடனடியாக இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்போதுதான் ராகுல் காந்தி வலிமையான தலைவர் என்ற எண்ணம் பொதுமக்களுக்கு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x