Published : 11 Jun 2019 01:57 PM
Last Updated : 11 Jun 2019 01:57 PM

உ.பி. பத்திரிகையாளர் கைதுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: உடனடியாக விடுவிக்க உத்தரவு

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கிளப்பும் வீடியோவைப் பதிவிட்டதாகப் புகார் கூறி பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய பெண் ஒருவர், தான் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறினார். இந்த வீடியோ காட்சிகளை டெல்லி நொய்டாவைச் சேர்ந்த செய்தியாளர் பிரசாந்த் கனோஜியா என்பவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இதையடுத்து கனோஜியாவிற்கு எதிராக லக்னோவில் உள்ள ஹஸ்ராத்கஞ்ச் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கனோஜின் மனைவி, கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற கோடை விடுமுறை கால நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாணைக்கு வந்தது.

விசாரணையின்போது, பிரசாந்த் கனோஜியாவை விடுவிக்க உ.பி. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். அவரை விடுவித்தால், அவர் செய்த செயல் நியாயம் என்றாகி விடும் என கூறினார். ஆனால், அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:

‘‘உ.பி. முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிட்டதற்காக பத்திரிகையாளரைக் கைது செய்ததை சரியானதாக கருதுகிறீர்களா? ஒவ்வொரு தனி நபருக்கும் தனது கருத்தை சதந்திரமாக தெரிவிக்க உரிமை உள்ளது. சில நேரங்களில் சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவைதான். அதற்காக கைது செய்வீர்களா?

அதுமட்டுமின்றி ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பது எப்படி சரியாகும். கனோஜியாவை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x