

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்செக் நகரில் இன்றும் நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பாகிஸ்தான் வான்வழியாக பிரதமர் மோடியின் விமானம் செல்ல அனுமதிக்குமாறு இந்திய அரசு பாகிஸ்தான் அரசிடம் கோரிககை விடுத்தது.
இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் கொள்கை ரீதியாக ஏற்பதாகவும், முறைப்படி பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது. எனினும், கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக செல்லாது எனவும், ஈரான் வழியாக பயணிக்கும் எனவும் வெளியுறவு அமைச்சகம் நேற்று அறிவித்தது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி ஓமன், ஈரான் வழியாக இன்று பிற்பகல் 3 மணியளவில் பிஷ்கேக் விமான நிலையம் சென்றடைகிறார்.
மாநாட்டின் இடையே அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார்.
4.50 மணியளவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும், 5.30 மணியளவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும், 6.30 மணியளவில் கிர்கிஸ்தான் அதிபர் சூரான்பே ஜீன்பெகோவையும், இரவு 10 மணியளவில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியையும் மோடி சந்தித்து பேசுகிறார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் சந்திப்பு இல்லை என ஏற்கெனவே இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.