

பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், மற்றும் பாஜக இடையே திடீர் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பிஹாரில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்த நிதிஷ் குமார், எந்த பாஜக எம்எல்ஏக்குவுக்கும் இடம் அளிக்கவில்லை இதனால், பாஜக, நிதிஷ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிஹாரில், பாஜக, ஜேடியு கூட்டணி ஆட்சி நடந்தபோதிலும், பாஜகவுக்கு இன்று அமைச்சரவையில் நிதிஷ்குமார் இடம் அளிக்காதது, பாஜகவுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் வென்று 2-வது முறையாக ஆட்சி அமைத்தது. பிஹார் மாநிலத்தில் 17 இடங்களில் நின்ற பாஜக அனைத்து இடங்களிலும் வென்றது, அதேபோல, நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு கட்சியும் 17 இடங்களில் 16 இடங்களில் வென்றது.
இதனால், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் தங்களுக்கு முக்கியமான துறைகள் கிடைக்கும் என்று நிதிஷ் குமார் எண்ணினார். ஆனால், ஒரு அமைச்சர் பதவி மட்டுமே பாஜக தலைமை ஒதுக்கியது. பிஹாரில் பாஜக வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்த தங்களுக்கு அமைச்சரவையில் ஒரு இடம்தான் ஒதுக்குவதாக என்று எண்ணிக்கு நிதிஷ் குமார் பாஜக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தார்.
குறியீட்டு அடிப்படையில் தங்களுக்கு அமைச்சர் பதவி தேவையில்லை என்று கூறி அமைச்சரவையில் இடம் பெற நிதிஷ் குமார் மறுத்துவிட்டார்.
இந்த சூழலில் இன்று பிஹார் அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு 8 அமைச்சர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். ஆனால், அந்த 8 அமைச்சர்களில் ஒருவர் கூட பாஜகவைச் சேர்ந்தவர்கள் இல்லை. பாஜகவை முற்றிலும் நிதிஷ் குமார் புறக்கணித்து பதிலடி கொடுத்துள்ளார். தற்போது பிஹாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையின் எண்ணிக்கை 25 அமைச்சர்கள் அளவில் இருந்து 33 ஆக உயர்ந்துள்ளது. இன்று பதவி ஏற்ற 8 அமைச்சர்களில் 5 பேர் புதியவர்கள்.
முதல்வர் நிதிஷ் குமாரிடம் இதுகுறித்து கேட்டபோது, " பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் எந்தவிதமான பிளவும் இல்லை. அடுத்துவரும் அமைச்சரவை விரிவாக்கத்தில் எங்களை சேர்ப்பதாக பாஜக கூறி இருக்கிறது " எனத் தெரிவித்தார்.
ஆனால், ஜேடியு கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், " பாஜக தனது மத்திய அமைச்சரவையில் ஜேடியுகட்சிக்கு ஒரு இடம் அளிக்க முன்வந்தது நிதிஷ் குமாரை கடுமையான ஆத்திரத்தில் தள்ளி இருக்கிறது. மிகுந்த கோபத்தில் இருக்கிறார். இப்போது பாஜகவுக்கு இடம் இல்லாமல், அமைச்சரவை விரிவாக்கம் செய்திருப்பது பாஜக மீது நிதிஷ் இருக்கும் கோபத்தை வெளிப்படுதுகிறது" எனத் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் கே.சி. தியாகி கூறுகையில், " நிதிஷ் குமார் தலைமயிலான ஜேடியு இனிஒருபோதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அமைச்சரவையில் எதிர்காலத்தில் பங்குபெறாது. இது எங்களின் இறுதியான முடிவு "எனத் தெரிவித்தார்.
பிஹார் மாநிலத்தில் சக்திவாய்ந்தவர்கள் பாஜக அல்ல, ஐக்கிய ஜனதா தளம் கட்சிதான் என்பதை பாஜகவினர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தெரிந்து கொள்வார்கள் என்று ஜேடியு கட்சியினர் கூறுகின்றனர்.
ஆனால், மாநில துணை முதல்வரும், பாஜக தலைவருமான சுஷில் குமார் மோடி, " தங்களுக்கும், முதல்வர் நிதிஷ்குமாருக்கும் எந்தவிதமான மோதலும் இல்லை. பாஜகவும் அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்போகிறது. அப்போது அவருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் " எனத் தெரிவித்தார்.