மக்களவை சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார் ஓம் பிர்லா: பிரதமர் மோடி புகழாரம்

மக்களவை சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார் ஓம் பிர்லா: பிரதமர் மோடி புகழாரம்
Updated on
2 min read

மக்களவை சபாநாயகராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சபாநாயகராக ஓம் பிர்லாவை பிரதமர் மோடி முன்மொழிந்தார். அதன்பின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முன்மொழிந்தனர். குரல் வாக்கெடுப்பின் மூலம் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு அளித்தன.

நாடாளுமன்ற 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 17-ம் தேதி தொடங்கியது. இதில், மக்களவையின் இடைக்கால தலைவர் வீரேந்திர குமார் புதிய உறுப்பினர்களுக்கு கடந்த 2 நாட் களாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து மக்களவைத் தலைவர் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் நேற்று முடிவடைந்ததையடுத்து, இன்று தேர்தல் நடந்தது.

இந்நிலையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மக்களவைத் தலைவர் வேட்பாளராக பாஜக எம்.பி. ஓம் பிர்லா பெயரை பிரதமர் மோடி முன்மொழிந்தார்.  ஓம் பிர்லாவை மக்களவைத் தலைவராக முன்மொழியும் நோட்டீஸ் பாஜக சார்பில் மக்களவைச் செயலகத்தில் நேற்று வழங்கப்பட்டது.

பாஜகவின் கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகள் அவரது பெயரை வழிமொழிந்தன. அதிமுக, சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் வழிமொழிந்தன.

அதுபோலவே பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படும் பிஜூ ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் வழிமொழிந்தன. திமுக, காங்கிரஸ் கட்சியும பிர்லாவை ஆதரிப்பதாக இன்று நோட்டீஸ் அளித்தன.

இந்நிலையில் இன்று மக்களவை தொடங்கியதும், ஓம் பிர்லாவை ஆதரித்து பிரதமர் மோடி தீர்மானம் கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா ஆகியோரும் தீர்மானம் கொண்டுவந்தனர். பிர்லாவுக்கு ஆதரவாக 13 தீரமானங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்பின் குரல் வாக்கெடுப்பில் ஓம் பிர்லா முழுமையான ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டதாக  தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் அறிவித்தார்.

அதன்பின் புதிய மக்களவை சபாநாயகரான ஓம் பிர்லாவை பிரதமர் மோடி அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தார். பிரதமர் மோடிக்கு பிர்லா இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார்.

பிரதமர் மோடி மக்களவையில் பேசுகையில், "மக்களவையின்  பெருமைக்குரிய நேரம் இதுவாகும். புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். பல எம்.பி.க்களுக்கும் பிர்லாவை நன்கு தெரியும்.நீண்டகாலமாக பிர்லா செய்யும் அரசியல் பணிகளை நான் பார்த்து வருகிறேன். கோட்டா தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பிர்லா  கல்விக்காக பல பணிகளைச் செய்துள்ளார். மாணவர் தலைவராக அரசியலில் நுழைந்து, சமூகத்துக்கு இடைவெளியின்றி பல்வேறு பணிகளைச் செய்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

மக்களவை சபாநாயகராக புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லா 2-வது முறையாக எம்.பி.யாகியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிர்லா கடந்த 2003, 2008, மற்றும் 2013-ம் ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டவர்.

2014-ம் ஆண்டு எம்.பி.யாகத் தேர்வான பிர்லா, மக்களவைத் தேர்தலில் கோட்டா,பண்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். நாடாளுமன்றத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் 86 சதவீதம் வருகையை பிர்லா பதிவு செய்துள்ளார். 61 கேள்விகள் கேட்டுள்ள பிர்லா, 163 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 6 தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 1991 முதல் 2003-ம் ஆண்டு வரை பாஜகவின் யுவமோர்ச்சா அமைப்பில் முக்கியத் தலைவராக பிர்லா இருந்தார். அதன்பின் மாநிலத் தலைவராகவும் உயர்ந்தார்.

முதுநிலை வணிகவியல் படிப்பு முடித்த பிர்லா, நாடாளுமன்றத்தில் எரிசக்தி நிலைக்குழு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் நிலைக்குழுவில் பணியாற்றியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in