Published : 20 Jun 2019 03:36 PM
Last Updated : 20 Jun 2019 03:36 PM

குஜராத் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் ஆயுள் தண்டனை பெற்றார்: ‘லாக்- அப்’ மரண வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

குஜராத்தில் போலீஸ் காவலில் இருந்தவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், பணியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்த ஜாம்நகர் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் 1990-ம் ஆண்டு காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர் சஞ்சீவ் பட். மதக் கலவரத்தில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டனர். காவல்நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர்களை போலீஸ் அதிகாரிகள் கொடூரமாக  தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் பிரபுதாஸ் வைஷ்னானி என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அவரது மரணத்துக்கு காரணம் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  எனக் கூறி, பிரபுதாசின் சகோதரர்  அம்ரீத் பாய் ஜாம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதைத்தொடர்ந்து சஞ்சீவ் பட் உள்ளிட்ட 7 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிரபுதாஸ் சிறை காவலில் இருந்தபோது இவர்கள் 7 பேரும் துன்புறுத்தியதால்தான் பிரபுதாஸ் இறந்ததாக அவரது சகோதரர் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் முக்கியமான சாட்சியங்கள் விடுபட்டு இருந்ததாகவும் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறியும் சஞ்சீவ் பட் பதில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு, குஜராத் உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை நடந்தது. இதனால் ஜாம்நகர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதில் தாமதம் நீடித்து வந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து இந்த வழக்கில் ஜாம்நகர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சஞ்சீவ் பட், காவலர் பர்வீன் சிங் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினர்.

சஞ்சய் பட் மீது வேறு சில வழக்குகளும் உள்ளன. அனுமதியின்றி, தகவல் தெரிவிக்காமல் காவல்துறை வாகனங்களை எடுத்துச் சென்ற புகாரில் 2011-ம் ஆண்டு அவர் காவல்துறை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் 2015-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x