Published : 01 Jun 2019 12:13 PM
Last Updated : 01 Jun 2019 12:13 PM

‘‘கடைசி மூச்சு உள்ளவரை போராடுவோம்’’ - காங்கிரஸ் எம்.பி.க்களிடம் சோனியா காந்தி உறுதி

இந்த அரசின் நல்ல திட்டங்களை நாம் ஆதரிப்போம். அதேசமயம் நமக்கு எதிராக செயல்பட்டால் நமது கடைசி மூச்சு உள்ளவரை எதிர்த்து போராடுவோம் என காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசினார்.

மக்களவைத் தேர்தலுக்கு பின்பு நாடாளுமன்றம் ஜூன் 6-ம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கவும், எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற செயல் திட்டத்தை வகுக்கவும் காங்கிரஸ் சார்பில் நேற்று நடத்த இருந்த எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்  டெல்லியில் இன்று நடைபெற்றது. நாடுமுழுவதும் காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 52 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் உள்ள காங்கிரஸ் எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில்,காங்கிரஸ்  நாடாளுமன்ற கட்சியின் தலைவரான சோனியா காந்தியை மீண்டும் அப்பதவிக்கு ஏகமனதாக தேர்வு செய்தனர்.

இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:

இந்த அரசின் நல்ல திட்டங்களை நாம் ஆதரிப்போம். அதேசமயம் நமக்கு எதிராக செயல்பட்டால் நமது கடைசி மூச்சு உள்ளவரை எதிர்த்து போராடுவோம். ராஜஸ்தான், ம.பி, சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றோம். அதன்  பிறகு நடந்துள்ள மக்களவைத் தேர்தலில் நாம் தோற்றுள்ளோம்.

தேர்தலில் நாம் தோற்று இருக்கலாம்.  ஆனால் நமது கொள்கைகள் எப்போதும் தோற்பதில்லை. நமது கொள்கைளை மக்களிடம் எப்போதும் கொண்டு செல்வோம். இதன் மூலம் கட்சிக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க வேண்டும்.

கட்சியின் வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x