ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகள் நடனம்: டி.வி. சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகள் நடனம்: டி.வி. சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Published on

ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறுவர்களை நாகரிகமற்ற முறையில் ஆடைகளை அணிந்து வரச் சொல்லிக் காண்பிப்பதை தவிர்த்து கண்ணியமாக நடத்த வேண்டும் என்று அனைத்து தனியார் சேனல்களுக்கும் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பல தனியார் சேனல்கள் சிறுவர், சிறுமியரை வைத்து அதிக அளவில் ரியாலிட்டி ஷோக்களையும்,  நடன நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன. இதில் பங்கேற்கும் சிறுவர்கள், குழந்தைகள் திரைப்படங்களில் வரும் நடனக் காட்சிகளைப் போன்று உடல் அசைவுகளை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த நடன அசைவுகள் நாகரிகமற்ற முறையிலும், முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கருதுகிறது, அதை கண்காணித்துள்ளது. குழந்தைகளின் வயதுக்கு ஏற்கத்தகாத இதுபோன்ற நடன அசைவுகள், அவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

சிறுவர்கள், குழந்தைகளின் இதுபோன்ற  நடனங்கள், மோசமான தாக்கத்தை அவர்களின் மனதில் ஏற்படுத்தும் என்பதால், இதுபோன்ற நிகழ்ச்சிகளையும், குழந்தைகளை தவறாக சித்தரிக்கும் நடனத்தையும் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளின் கண்ணியத்தை குலைக்கும் நிகழ்ச்சிகள், வன்முறைக் காட்சிகள், மோசமான நடன அசைவுகள் போன்றவை இடம் பெறாமல்  தனியார் தொலைக்காட்சிகள் மிகுந்த எச்சரிக்கையுடன், கவனத்துடன் செயல்பட வேண்டும். 1995, கேபிள் தொலைக்காட்சி  (ஒழுங்குமுறை) சட்டத்துக்கு உட்பட்டு, அனைத்து தனியார் டிவி சேனல்களும் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in