Last Updated : 22 Jun, 2019 02:06 PM

 

Published : 22 Jun 2019 02:06 PM
Last Updated : 22 Jun 2019 02:06 PM

தெலங்கானாவின் கல்லணை காலேஸ்வரம்!

உலகிலேயே மிகப்பெரிய இறைவை பாசனத் திட்டமாகக் கருதப்படும் காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தை தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தொடங்கி வைத்தார். காலேஸ்வரம் அணையிலிருந்து முதல் ஆறு மதகுகளை சந்திரசேகர ராவ் நேற்று திறந்துவைத்து தண்ணீரை வெளியேற்றினார்.

வருடம் 45 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர் பாசனம், மாநிலத்தின் 70 சதவீத மக்களுக்கு குடிநீர் போன்ற நன்மைகளை இத்திட்டம்  வழங்கவுள்ளது. தண்ணீர் பஞ்சம், விவசாய பிரச்சினை, நீர் மேலாண்மை என அனைத்து சவால்களுக்கும் தீர்வாக அமைய உள்ளது காலேஸ்வர அணை திட்டம்.

காலேஸ்வரத்தின் தொழில்நுட்ப அதிசயங்கள் ஏராளம். இந்தியாவின் இரண்டாவது நீளமான நதியான கோதாவரியில் இருந்து கிராவிட்டி கேணல் எனப்படும் கால்வாய்கள் மற்றும் டனல்கள் மூலம் 1832 கி.மீ. தூரம்  பரந்து விரிந்துள்ளது நீர்ப்பாதை. இறைவை தொழில்நுட்பம் மூலம் கடல் மட்டத்திற்கு 100 மீட்டருக்கு மேல் அமைந்துள்ள மெடிகடா என்ற இடத்தில் இருந்து தினமும் 2 டி.எம்.சி. நீரை இறைத்து கடல் மட்டத்தில் இருந்து 612 மீட்டருக்கு மேல் அமைந்துள்ள கொண்டபோச்சம்மா சாகர் அணையைச் சென்றடைகிறது.

இதுபோன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ள காலேஸ்வர திட்டத்தை நிறைவேற்ற அம்மாநிலம் எடுத்துக்கொண்ட காலம் மூன்று வருடம் மட்டுமே என்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதற்கு அதிகாரிகளின் துடிப்பான செயல்பாடும் முதல்வரின் நேரடி வழிகாட்டுதலும் முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

ஒரு காலத்தில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய தமிழகத்தின் தற்போதைய நிலைமை கேள்விக்குறியாகியுள்ள வேளையில் மற்றொரு தென்மாநிலமான தெலங்கானாவின் செயல்பாடுகள் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதற்குச் சான்றாக கடந்த 5 வருடங்களில் அம்மாநிலத்தில் நீர் மேலாண்மைக்காக கொண்டுவரப்பட்ட மிஷன் பாகிறதா, சீதா-ராமா திட்டம், பாலமுறு-ரங்காரெட்டி திட்டம் என பல்வேறு திட்டங்கள் அமைந்துள்ளன.

கோதாவரியில் நீர் உள்ளது. அதனால் காலேஸ்வர திட்டம் சாத்தியப்பட்டுள்ளது. ஆனால் காவிரியில் இருந்து நீர் கிடைத்தால் தானே அது கல்லணையை வந்தடையும். அதன் பிறகு தானே நீர் மேலாண்மை எல்லாம் என்ற சிந்தனை எழலாம். காவிரியைப் போல் கோதாவரியின் உதயமும் வேறு மாநிலத்தில் தான், பிற்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க கூட்டு நீர்ப்பாசன ஒப்பந்தத்தை மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸுடன் 2016-லேயே கையெழுத்திட்டார் சந்திரசேகர ராவ். இத்தொலைநோக்குப்பார்வை வெகு விரைவிலேயே "பங்காரு தெலுங்கானா" (தங்கத் தெலங்கானா) என்ற அம்மாநில அரசின் இலக்கை அடைய உதவும்.

80 ஆயிரம் கோடி செலவில் உருவான காலேஸ்வர திட்டம் மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல் உருவான மிகப்பெரிய திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x