

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 700 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் அளித்து உள்துறை அமைச்கத்தின் இணையமைச்சர் கிஷன் ரெட்டி பேசியதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 733 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் 16-ம் தேதிவரை 113 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு 257 தீவிரவாதிகளும், 2017-ம் ஆண்டு 213 தீவிரவாதிகளும், 2016-ம் ஆண்டு 150 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்த தருணங்களில் 112 பொதுமக்கள் உயிரிழந்தனர். கடந்த 2016ம் ஆண்டில் 15 பொதுமக்களும், 2017-ம் ஆண்டு 40 பேரும், 2018-ம் ஆண்டில் 39 பேரும், இந்த ஆண்டின் 3 மாதங்களில் 18 பேரும் உயிரிழந்தனர்.
தீவிரவாதத்தை இந்த அரசு ஒருபோதும் எந்த விஷயத்துக்கும் சமரசம் செய்து கொள்ளாது. தீவிரவாதத்தை ஒழிக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து சிறப்பான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நடவடிக்கையின் விளைவாகத்தான் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
இது தவிர சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் 155 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். தேசிய புலனாய்வு அமைப்பு, மாநில போலீஸாரின் உதவியுடன் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பு சமூக வலைதளங்களில் தங்களின் கொள்கைகள், சித்தாந்தங்களை பல்வேறு வழிகளில் பரப்பி வருகிறது. அவற்றை தடுக்கும் முயற்சியில் சைபர்பிரிவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு கிஷன் ரெட்டி தெரிவித்தார்.