Last Updated : 16 Jun, 2019 12:40 PM

 

Published : 16 Jun 2019 12:40 PM
Last Updated : 16 Jun 2019 12:40 PM

17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்  திங்களன்று தொடக்கம்: தொடர்பறுந்த எதிர்க்கட்சிகள் துவண்ட நிலையிலிருந்து மீளூமா?

17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் திங்கட் கிழமை தொடங்குகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக பெரிய வெற்றியப் பெற்றதையடுத்து, பிரதமராக 2வது முறையாக மோடி பதவியேற்றார். இந்நிலையில் நாளை முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இடைக்கால சபாநாயகர் விரேந்திர குமார் எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

 

2 நாட்கள் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின் வருகிற 19ம் தேதி சபாநாயகர் தேர்வு நடைபெறும். 20ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார்.

 

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தொடருக்கு இன்னும் தயாராகவில்லை, ஒழுங்கற்ற நிலையில் எதிர்க்கட்சிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத மூத்த எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்குத் தெரிவித்த போது, “கட்சிகளுக்கிடையே எந்த ஒரு தொடர்பும் இல்லை. பொதுவாக நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிறது என்றால் தொலைபேசிகள் இயங்கத் தொடங்கும் ஆனால் இந்த முறை எதிர்க்கட்சிகளிடையே கூட்டத்தொடரில் என்ன செய்யப்போகிறார்கள் என்பது பற்றிய உரையாடல் கூட இல்லை” என்றார்.

 

மே 23ம் தேதி எதிர்க்கட்சிகளை நிலைகுலையச் செய்த தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே அவர்கள் சந்திக்கவில்லை.  தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லாத எதிர்க்கட்சிகள் தேர்தல் அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளவில்லை என்று சிலவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே 31ம் தேதி எதிர்க்கட்சிகள் சந்திப்பதாக இருந்தது. ஆனால் இந்தக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதன் காரணம், முக்கியக் கட்சிகள் தேர்தல் தோல்வி பற்றிய சுயபரிசோதனையில் ஈடுபட வேண்டியதாயிற்று. அதன் பிறகே எதிர்க்கட்சிகளிடையே எந்த ஒரு தொடர்பும் இல்லை.

 

‘கட்டப்பட்ட பசுவான காங்கிரஸ்’

 

வழக்கமாக காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளை அழைத்து கூட்டத் தொடர் திட்டங்களை விவாதிக்கும். ஆனால் இந்த முறை ஒரு அழைப்பும் காங்கிரஸ் தரப்பிலிருந்து வரவில்லை. ராகுல் காந்தியும் வெளிநாட்டில் இருப்பதாக தகவல்கள் வந்த நிலையில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும், அதற்கு அவரைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்று பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதால் கூட்டத்தொடர் விவாதங்களுக்கு அங்கு இடமில்லாமல் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக கூட்டும் கூட்டங்கள் எதிலும் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை.

 

இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத இன்னொரு காங்கிரஸ் தலைவர், “நிச்சயம் கூட்டம் நடைபெறும், பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தங்கள் அவைநிகழ்வுத் தலைவர்களை தேர்வு செய்யவில்லை.” என்றார்.

 

மக்களவையில் 3வது பெரிய எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, இன்னும் தங்களுக்கும் எந்தத் தகவலும் வரவில்லை என்றார்.

 

மேற்கு வங்கத்தில் வன்முறை, டாக்டர்கள் தரும் நெருக்கடி என்று பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் திரிணமூல் காங்கிரஸும் தன் சிக்கல்களில் கவனம் செலுத்தி வருகிறதே தவிர நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி வாளாவிருக்கிறது.

 

தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளுடன் சுறுசுறுப்பாக இயங்கைய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு லோக்சபாவில் 3 எம்பிக்கள்தான் உள்ளனர், அவரும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் இடிந்து போயுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுவதால், வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்னவாக இருக்கும் என்பதில் நிச்சயமற்ற நிலை நீடித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x