

உத்தரப் பிரதேச மாநிலத்தைப் போல் மருத்துவ அலட்சியத்திற்கான வேறு மாநிலங்கள் இந்தியாவில் உள்ளனவா என்ற கேள்வியை எழுப்பும் ஒரு வேதனையான சம்பவம் முசாபர்நகர் அரசு ஹெல்த் செண்டரில் நடந்துள்ளது.
மயக்க நிலையில் நோயாளி ஒருவர் படுக்கையில் கிடப்பதை மறந்து அரசு ஹெல்த் கேர் செண்டர் ஊழியர்கள் மருத்துவமனையைப் பூட்டி விட்டு பணிநேரம் முடிந்து விட்டது என்று வீட்டுக்குச் சென்ற சம்பவம் முசாபர்நகரில் நடந்துள்ளது.
30 வயது மதிக்கத்தக்க நோயாளி சோனியா வெள்ளிக்கிழமையன்று ஃபலோடா கிராமத்திலிருந்து அரசு ஹெல்த் செண்டருக்கு அழைத்து வரப்பட்டார். நோயாளி அறையில் அவர் நினைவு திரும்பாத நிலையில் மயக்கத்தில் கிடந்துள்ளார். அப்போது கொஞ்சமும் கவனமும், அக்கறையும் இல்லாமல் மருத்துவர் உட்பட ஊழியர்கள் தங்கள் பணி நேரம் முடிந்து விட்டது என்று ஹெல்த் செண்டரையே பூட்டு போட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளனர். இது நடக்கும் போது மதிய வேளை என்பதும் கவனிக்கத்தக்கது.
சிறிது நேரம் கழித்து மயக்கத்திலிருந்து நினைவு திரும்பிய நோயாளி சோனியா தான் அறையில் தனியாக செண்டரில் அடைபட்டுக் கிடப்பதைக் கண்டு பீதியடைந்தார். உடனே உதவி கேட்டு அவர் கதறியுள்ளார்.
இவரது கதறல் வெளியே கேட்க உள்ளூர் வாசிகள் சிலர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி அவரை மருத்துவமனையிலிருந்து மீட்டுள்ளனர்.
இது பெரிய சர்ச்சைகளைக் கிளப்ப கீழ்நிலை ஊழியர் ஒருவரும் 4 அதிகாரிகள், மருத்துவ அதிகாரி டாக்டர் மோஹித் குமார், தலைமை மருந்தாளுநர் பிரவீண் குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. விசாரணைக் குழு 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே உள்ளூர்வாசிகள் அலட்சியம் காட்டிய மருத்துவர் உட்பட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.