

சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கும் வகையில் உத்தரப் பிரதேச அரசு இந்தி, ஆங்கிலம், உருது ஆகியவற்றோடு சமஸ்கிருத மொழியிலும் பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது தொடர்பான பத்திரிகைச் செய்தி முதல் முறையாக சமஸ்கிருத மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், "முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சுகள், அரசின் முக்கிய உத்தரவுகள் ஆகியவை இந்தி, ஆங்கிலம், உருது மொழியில் பத்திரிகைச் செய்திகளாக வெளியிடப்பட்டு வந்தன. இனிமேல் கூடுதலாக சமஸ்கிருத மொழியிலும் வெளியாகும். இதற்காக லக்னோவில் உள்ள ராஷ்ட்ரிய சமஸ்கிருத அமைப்புடன் உதவி கோரியுள்ளோம்.
சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்க இதுதான் எங்களின் முதல் முயற்சியாகும். நிதி ஆயோக்கில் முதல்வர் பேசிய பேச்சு முதல் கட்டமாக சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தனர்.
முன்னதாக, லக்னோவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆதித்யநாத், நாட்டின் மரபணுவில் சமஸ்கிருத மொழி இருக்கிறது. ஆனால் இப்போது அது சுருங்கி அர்ச்சகர்கள் மட்டும் பேசும் மொழியாகிவிட்டது" எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.