

பிஹார் மாநில மருத்துவர்களுடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. பப்பு யாதவின் மோதல் முற்றுகிறது. எம்.பி. மீது, பிஹார் மருத்துவர்கள் நலச்சங்கம் சார்பில், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜனுக்கு புகார் மனு அனுப் பப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் பிஹார் கிளையின் சார்பில் சபாநாய கருக்கு அனுப்பப்பட்டுள்ள புகாரில், மருத்துவமனைகளுக்குள் புகுந்து எம்.பி. பப்பு யாதவ், மருத்துவர்களை திட்டுவதாகவும், மிரட்டுவதாகவும் கூறப் பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனை நிர்வாகங் கள் அமைப்பு சட்டம்(பதிவு மற்றும் ஒழுங்குமுறை) 2010-ஐ கண்டிப்பாக அமல்படுத்தும்படி கட்டாயப்படுத்துவ தாகவும் பப்பு மீது புகார் கூறியிருப்பதுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.
பிஹார் கிரிமினல் அரசியல்வாதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் பப்பு யாதவ் எனும் ராஜேஷ் ரஞ்சன் யாதவ். இவர் கடந்த 11-ம் தேதி பிஹார் மருத்துவர்கள் தங்கள் ஆலோசனைக் கட்டணங் களை குறைத்துக் கொள்ள வேண்டும் என அறிக்கை மூலம் வலியுறுத்தினார்.
தொலைக்காட்சி செய்திச் சேனல்க ளுக்கு பப்பு அளித்த பேட்டியில், மருத்து வர்கள் பணத்துக்காக ‘உயிர்களை கொல்பவர்கள், ‘மனித சதைகளை உண்ணும் பேய்கள்’ எனக் கடுமையாகக் குற்றம் சுமத்தினார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் மருத்து வர் அஜய் குமார் கூறும்போது, ‘நான் பப்புவிடம் இதுகுறித்து போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, எந்த மருத்துவர் மீதும் கடுமையான சொற்களைப் பயன்படுத்தவில்லை என மறுப்புத் தெரிவித்தார். இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர பப்பு யாதவிடம் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேச இருக்கிறோம்’ என்றார்.
பிஹார் மதேபுரா தொகுதி எம்.பி.யான பப்பு யாதவ், எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு படித்தவர்கள் ரூ.100, பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் ரூ.200 மூத்த சிறப்பு மருத்துவர்கள் ரூ.300 என்ற அளவில்தான் ஆலோசனைக் கட்டணம் பெற வேண்டும் என தன் தொகுதியை சேர்ந்த மருத்துவர்களுக்கு கடுமையான உத்தரவளித்து அமல்படுத்தியுள்ளார். இதைமீறும் மருத்துவர்கள் பற்றி உடனடியாக தமக்கு போனில் தெரிவிக்கும்படியும் தொகுதிவாசிகளிடம் தனது தொலைபேசி எண்ணை கொடுத்து வைத்திருக்கிறார்.