Published : 04 Mar 2018 01:40 PM
Last Updated : 04 Mar 2018 01:40 PM

கடந்த தேர்தலில் படுதோல்வி; இந்தத் தேர்தலில் அமோக வெற்றி: திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது பாஜக - தனிப்பெரும் கட்சியாக 35 இடங்களைக் கைப்பற்றியது

திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. மாநில பாஜக தலைவர் விப்லவ் குமார் தேவ் முதல்வராக வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. திரிபுராவில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 59 இடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, காங்கிரஸ், சுயேச்சைகள் உட்பட மொத்தம் 290 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 23 பேர் பெண்கள்.

திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி நடந்தது. முதல்வராக மாணிக் சர்க்கார் தொடர்ந்து 4 முறை பதவி வகித்தார். ஐந்தாவது முறையும் அவர் முதல்வராகப் பதவியேற்பார் என்று கூறி மார்க்சிஸ்ட் கட்சி நம்பிக்கையுடன் தேர்தல் களம் இறங்கியது. ஆனால், தேர்தலில் பாஜக கடும் போட்டியாக இருந்தது. மேலும், திரிபுரா உள்ளூர் மக்கள் முன்னணி கட்சியுடன் (ஐபிஎப்டி) பாஜக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது.

இந்நிலையில், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் நாராயண் தேபார்மா தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் காலமானார். அதனால் சரிலாம் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், திரிபுராவில் 59 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன. கருத்துக் கணிப்புகளை உண்மையாக்கும் வகையில் பாஜக முன்னிலை பெற்றது. திரிபுராவில் கடந்த தேர்தலில் வெறும் 1.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று பாஜக படுதோல்வி அடைந்தது. இந்த முறை தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது.

சர்க்கார் வெற்றி

முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினருமான மாணிக் சர்க்கார், தன்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

திரிபுரா பாஜக தலைவர் விப்லவ் குமார் தேவ், பனாம்லிபூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் முதல்வராக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. பாஜக கூட்டணி கட்சியான ஐபிஎப்டி கட்சியில் நரேந்திர சந்திர தேபர்மா, தகர்ஜலா தொகுதியில் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் கடந்த 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த மாநிலத்தில் பாஜக - ஐபிஎப்டி கூட்டணி மூன்றில் 2 பங்கு தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. பாஜக 35 இடங்களிலும், ஐபிஎப்டி 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 31 இடங்கள் இருந்தால் போதுமானது. பாஜக தனித்து 35 இடங்களைக் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களைக் கைப்பற்றி உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் அசாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது திரிபுரா மாநிலத்தையும் பாஜக கைப்பற்றி உள்ளது.

திரிபுரா தேர்தலில் மொத்தம் 92 சதவீத வாக்குகள் (தபால் வாக்குகளை சேர்க்காமல்) பதிவாகின. இது இந்திய தேர்தல் வரலாற்றில் புதிய சாதனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x