Published : 24 Mar 2018 11:01 AM
Last Updated : 24 Mar 2018 11:01 AM

மாநிலங்களவை தேர்தலில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிப்பு: உ.பி.யில் 9 இடங்களில் பாஜக வெற்றி

 

உத்தரப் பிரதேசத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் பல கட்சி எம்எல்ஏக்களும் கட்சி மாறி வாக்களித்ததால் பகுஜன் சமாஜ் வேட்பாளரைத் தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றது. அம்மாநிலத்தில் 10 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 9 இடங்களை பாஜக பிடித்துள்ளது. ஓரிடத்தில் சமாஜ்வாதி வெற்றி பெற்றுள்ளது. பல கட்சிகளின் ஆதரவுடன் களம் இறங்கிய பகுஜன் சமாஜ் தோல்வியடைந்தது.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது.. மொத்தம் 59 எம்.பிகளின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து அந்த இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் 33 பேர் போட்டியின்றி எம்.பிகளாக தேர்வு செய்யப்பட்டு விட்டனர். 26 இடங்களுக்குப் போட்டி நிலவுவதால் தேர்தல் நடைபெற்றது.

உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களில் 8 பேரை எம்.பியாக தேர்வு செய்வதற்கு பாஜகவிற்கு போதிய பலம் உள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கு ஒரு எம்பியைத் தேர்வு செய்ய முடியும். மீதமுள்ள ஒரு இடத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

அவருக்கு சமாஜ்வாதி கட்சியின் மீதமுள்ள எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு வழங்கினர். ஆனால் அதனை தட்டிப் பறிக்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டது. எட்டு பேரை தவிர மேலும் ஒருவர் பாஜக ஆதரவுடன் களம் இறக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ அனில் குமார் சிங், பாஜக வேட்பாளருக்கு வாக்களித்துள்ளார். தனது வாக்கைப் பதிவு செய்து விட்டு வெளியே வந்த அனில் குமார், ‘யோகி ஆதித்யநாத்துக்கு’ என ஆதரவு எனக் கூறினார்.

காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களின் வாக்குகளும் மாயாவதி வேட்பாளருக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. அதுபோலவே சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவரும் பாஜகவிற்கு வாக்களித்தனர். தேர்தல் முடிந்து நேற்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டன. இழுபறி நீடித்ததாதல் இரவு வரை வாக்கு எண்ணிக்கை நீடித்தது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 10 இடங்களில் 9 இடங்களை பாஜக வெற்றி பெற்றது. ஓரிடத்தில் சமாஜ்வாதி வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் வேட்பாளர் தோல்வியடைந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘‘சமாஜ்வாதி கட்சியின் சதியை முறியடித்துள்ளோம். மீண்டும் தர்மம் வென்றுள்ளது’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x