Published : 27 Mar 2018 12:12 PM
Last Updated : 27 Mar 2018 12:12 PM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை: தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்ட போதிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடை ஏதுமில்லை என தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்ட்டது. தேர்தலுக்கான, வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 17ம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 24ம் தேதி மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 25ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்ப பெற 27ம் தேதி கடைசி நாளாகும். மே 12ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மே 15ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

கர்நாடக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படும் என வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்த பிரச்சினையை பயன்படுத்தி கர்நாடகாவில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் பிரச்சாரம் செய்யும் என்பதால் இதற்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடை ஏதுமில்லை என தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு, இதற்கும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கும் தொடர்பு ஏதுமில்லை. காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தலாம். இதற்கு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கும் தொடர்பு படுத்தி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x