Published : 28 Sep 2014 11:01 AM
Last Updated : 28 Sep 2014 11:01 AM

நேரடி ஆசிரியர் நியமனம் இல்லாததால் அரசு நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், வரலாறு பட்டதாரிகள் பாதிப்பு

அரசு நடுநிலைப் பள்ளிகளில் நேரடி ஆசிரியர் நியமனம் இல்லாததால் தமிழ், வரலாறு பட்டதாரிகள் பாதிக்கப்படு கிறார்கள். அதேநேரத்தில், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் நேரடி நியமன வாய்ப்பை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கட்டுப் பாட்டின் கீழ் 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 49 ஆயிரத் துக்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்று கிறார்கள். ஏறத்தாழ 14 லட்சம் மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் தற்போது பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். முன்பு போல் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது கிடையாது. பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வு மூலமாக நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன.

நேரடி நியமனத்தில் முரண்பாடு

தொடக்கக் கல்வி இயக்குன ரகத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரி யர்களும், தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர்களும் பட்டப் படிப்பு மற்றும் பி.எட். கல்வித்தகுதியை பெறும்போது அவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறலாம்.

இந்த பதவி உயர்வு விகிதாச் சாரம் (50:50) ஆங்கிலம், கணிதம், அறிவியல் (இயற்பியல், வேதியியல் தாவரவியல் போன் றவை) பாடங்களுக்கு மட்டுமே பின்பற்றப்படுகிறது. தமிழ், வரலாறு பாடங்களில் 100 சதவீதம் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. இதனால், பி.எட். முடித்த தமிழ், வரலாறு பட்டதாரிகள் தொடக்கக் கல்வித்துறையில் நேரடி நியமனம் பெற முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி வரு கிறார்கள். இவர்களுக்கு ஒரே வாய்ப்பு உயர்நிலைப் பள்ளிகள் மட்டுமே, காரணம் உயர்நிலைப் பள்ளி களில் தமிழ், வரலாறு உள்பட அனைத்து பாடங்களிலும் 50 சதவீத பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நடைபெற்று வருகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட சில தமிழ், வரலாறு பட்டதாரிகள் கூறுகையில், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரிகளைப் போன்று நாங்களும் 3 ஆண்டு படிக்கிறோம். பி.எட். பட்டமும் பெறுகிறோம். ஆனால், வேலை வாய்ப்பு என்று வரும்போது, அரசு நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமன வாய்ப்பை மறுப்பது மட்டும் எந்த வகையில் நியாயம்? என்று வேதனையுடன் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஆங்கிலம், கணிதம், அறிவி யல் பட்டதாரி ஆசிரியர்களைப் போல தமிழ், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களையும் அரசு நடு நிலைப் பள்ளிகளில் 50 சதவீதம் நேரடியாக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x