

தமிழகத்தில் 30 கடலோரக் காவல் நிலையங்கள் 10 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
இதுகுறித்து, திமுக மாநிலங் களவை உறுப்பினர் கனிமொழிக்கு செப்டம்பர் 8-ம் தேதி அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப் பதாவது:
கடலோரத்தில் ரோந்துப்பணி மற்றும் கண்காணிப்பு, கடற்கரைப் பகுதிகள் மீதான கண்காணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கடலோர பாதுகாப்புத் திட்டம் மத்திய அரசால் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத் தின் முதல்கட்டம் ரூ. 646 கோடி செலவில் 2005-ல் ஐந்தாண்டு கால இலக்குடன் தொடங்கப்பட்டது. இது மேலும் நீட்டிக்கப்பட்டு 2011 மார்ச் வரை செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமானது ரூ. 1,580 கோடி மதிப் பீட்டில் 2011 ஏப்ரலில் தொடங்கப் பட்டது. அச்சுறுத்தல்களுக்கு எதிராக கடல் மற்றும் கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய கமிட்டி இந்த கடலோர பாது காப்புத் திட்டத்தின் செயல்பாடு களை கண்காணித்து வருகிறது.
தமிழ்நாட்டில் அமைக்கப்படு வதாக அறிவிக்கப்பட்ட 30 கடலோர காவல் நிலையங்கள் பற்றி மத்திய அரசு தீவிர அக்கறை கொண் டுள்ளது. கடலோர காவல் நிலையங் களை அரசு கட்டிடங்களில் மட்டுமே செயல்படுத்துவது என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதால் அங்கு பணிகள் தாமதமாகி வருகின்றன.
தற்போது கட்டப்பட்டு வரும் 27 கடலோரக் காவல் நிலையங் களுடன், இன்னும் பத்து மாதங் களுக்குள் முப்பது கடலோரக் காவல் நிலையங்களும் கட்டிமுடிக் கப்படும் என்று தமிழக அரசு தெரி வித்துள்ளது. மேலும் மீனவர்கள் - கடலோர பாதுகாப்புப் படை இடையிலான புரிந்துணர்வு நிகழ்ச் சிகள் அனைத்து மீனவ கிராமங் களிலும் வழக்கமாக நடைபெறுவ தாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது
கடலோர பாதுகாப்புத் திட்டத் தின் 2-வது கட்டத்தின்படி தமிழகத் தில் 30 கடலோரக் காவல் நிலையங் கள் அமைப்பதாக 2011-ல் அறிவிக்கப்பட்டும், இதுவரை ஒரு காவல்நிலையம் கூட அமைக்கப்படாதது குறித்து கனிமொழி கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்து கிரண் ரிஜிஜு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.