Last Updated : 06 Mar, 2018 07:33 PM

 

Published : 06 Mar 2018 07:33 PM
Last Updated : 06 Mar 2018 07:33 PM

4 சிலைகளை அகற்றி, கம்யூனிஸ்டுகளை ஒழித்து விட முடியாது: பாஜகவுக்கு பினராயி விஜயன் கண்டனம்

 4 சிலைகளை அகற்றி நாட்டில் இருந்து கம்யூனிஸ்டுகளை அழித்துவிட முடியாது என்று பாஜகவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை அகற்றிவிட்டு பாஜக முதல் முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது. இன்னும் அந்த மாநிலத்தில் யார் முதல்வர் என்று அறிவிக்கப்படவும் இல்லை.

இதற்கிடையே திரிபுராவின் தெற்கு மாவட்டத்தில், பெலோனியா நகரில் வைக்கப்பட்டு இருந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலைகளை பாஜகவினர் மண் அள்ளும் எந்திரம் கொண்டு அகற்றினர்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம், ஆதரவாளர்கள் வீடுகளிலும் பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளையும் அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும், லெனின் சிலை அகற்றப்பட்டதற்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்:

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும், லெனின் சிலை அகற்றப்பட்ட நிகழ்வும், தேசிய அளவில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக நடக்கும் சதியாகும். 4 சிலைகளை அகற்றிவிட்டால் இந்த நாட்டில் இருந்து கம்யூனிஸ்டுகளை ஒழித்துவிடலாம் என பாஜகவும், ஆர்எஸ்எஸ். அமைப்பும் நினைக்கிறார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகளை இந்த நாட்டில் இருந்து அகற்றவே முடியாது.

கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக தேசிய அளவில் மிகப் பெரிய சதி நடக்கிறது, அதில் ஒருபகுதிதான் இந்த வன்முறையாகும். நாட்டில் ஜனநாயகத்தையும், மதச் சார்பற்ற தன்மையையும் இன்னும் பாதுகாப்பாக இருந்து வருவது கம்யூனிஸ்டுகளால்தான். இதற்காக ஏராளமான உயிர் தியாகத்தை கம்யூனிஸ்டுகள் செய்து இருக்கிறார்கள்.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், ''திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து, புதன்கிழமை மாநிலத்தில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகிறது. தேர்தல் வெற்றி கிடைத்த ஒரு மணிநேரத்தில் 200 வீடுகளை பாஜகவினர் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். பண பலத்தாலும், மின்னணு வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்தும் பாஜகவினர் இந்தவெற்றியைப் பெற்றுள்ளனர்'' என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x