

உத்தரப்பிரதேச மாநிலத்தில், பெயர்க் குழப்பம் காரணமாக உண்மையான குற்றவாளிக்குப் பதிலாக நிரபராதி ஒருவர் 8 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். குற்றவாளி யிடமிருந்து லஞ்சம் பெற்ற போலீஸார் அந்த நிரபராதியைக் கைது செய்ததாக போலீஸார் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டம் திலால்பூரைச் சேர்ந்தவர் ஷெரோஜ் சிங்(44). அந்தக்கிராமத்தின் முன்னாள் ஊராட்சித் தலைவரான அவர், சிறிய மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தார். அவரை, கடந்த 2004-ம் ஆண்டு ஹரியாணா போலீஸார் திடீரெனக் கைது செய்தனர்.
விலையுயர்ந்த கார்களைத் திருடி விற்றது உட்பட நான்கு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன. ஷெரோஜ் சிங் கைது செய்யப்பட்டு ஹரியாணா சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகள் விசாரணை நடந்து வந்தது. இக்காலகட்டத்தில் விசாரணைக் கைதியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் கடந்த ஆண்டு விடுதலையானார்.
இது குறித்து முன்னாள் ஊராட்சித் தலைவர் ஷெரோஜ் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் கைது செய்யப்பட்ட தினத் தில், எனது நிலத்தை விலைக்கு வாங்குவதாகக் கூறி, அரசு பள்ளிக்கு அழைத்தனர். அங்கு சென்று பார்த்தபோது, ஹரியாணா மாநிலத்தின் பல்வல் போலீஸார், என்னை அடித்து, உதைத்து ஜீப்பில் ஏற்றி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.
இதன் பிறகு எனது மனைவி, தேவி அலிகர் நீதிமன்றத்தில் மனு அளித்து போராடிய பின் எனக்கு விடுதலை கிடைத்தது, என்றார்.
போலீஸாரின் தில்லுமுல்லு
அதே கிராமத்தில் வசிக்கும் மற்றொரு ஷெரோஜ் சிங்தான் உண்மையான குற்றவாளி எனக் கூறப்படுகிறது. அவர், தம்மை போலீஸார் கைது செய்ய வந்த போது, அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, தனக்குப் பதிலாக தனது பெயரில் உள்ள முன்னாள் ஊராட்சித் தலைவரைக் கைது செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது.
நஷ்ட ஈடு கோரி வழக்கு
செய்யாத குற்றத்துக்கு எட்டு வருடம் சிறை தண்டனை அனுபவித்ததற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என ஹரியாணா போலீஸார் மீது ஷெரோஜ் சிங் வழக்கு தொடுத்துள்ளார். இவ்வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 17-ம் தேதி ஹரியாணா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
மற்றொரு ஷெரோஜ் மறுப்பு
உண்மையான குற்றவாளியாகக் கருதப்படும் ஷெரோஜ் செய்தியா ளர்களிடம் கூறும்போது, “முன்னாள் ஊராட்சித் தலைவர் சொல்வது அத்தனையும் பொய். அவர்தான் உண்மையான குற்றவாளி. திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் அவரை அடையாளம் காண்பித் தமையால்தான் கைது செய்யப் பட்டார். அரசியல்வாதியான எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி இது” என்றார்.
இதனிடையே, உண்மையான குற்றவாளியைத் தேடி வருகிறோம் என பல்வல் போலீஸார் கூறியு ள்ளனர்.