Last Updated : 03 Mar, 2018 04:31 PM

 

Published : 03 Mar 2018 04:31 PM
Last Updated : 03 Mar 2018 04:31 PM

கவுரி லங்கேஷ் கொலை: கைதான இந்து யுவ சேனா உறுப்பினரை 8 நாள் காவலில் எடுத்து போலீஸார் தீவிர விசாரணை

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து யுவ சேனா அமைப்பைச் சேர்ந்த இளைஞரை 8 நாள் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவின் மூத்த பத்திரிகையாளரும், தீவிர இந்து வலதுசாரி எதிர்ப்பு சிந்தனையாளருமாக வலம் வந்தவர் கவுரி லங்கேஷ். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி தனது வீட்டு முன் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இவர் கொலை செய்யப்பட்டது நாடுமுழுவதும் முற்போக்கு சிந்தனையாளர்கள், மதசார்பற்ற சிந்தனைவாதிகள் மத்தியில், பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு பிரிவை ஏற்படுத்தி விசாரணையை துரிதப்படுத்தியது. ஏறக்குறைய 4 மாதங்களாக விசாரணை நடத்தியும் யாரும் கைது செய்யப்படவில்லை.

கவுரி லங்கேஷ் வீட்டைச் சுற்றி இருக்கும் கண்காணிப்பு கேமிராக்கள், சந்தேகப்படும் நபர்கள் என பலரையும் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கடந்த மாதம் 18—ம் தேதி துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்ததாக கே.டி. நவீன் குமார்(வயது37) கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில் இவருக்கும், கவுரி லங்கேஷ் கொலைக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கவுரி லங்கேஷ் கொலையில் கைதான முதல் குற்றவாளியாக நவீன் குமாரை போலீசார் சேர்த்தனர்.

கைது செய்யப்பட்ட நவீன் குமார், மாண்டியா மாவட்டம், மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், இந்து யுவ சேனா அமைப்பின் தீவிர உறுப்பினர் என்பதையும் போலிஸார் கண்டறிந்தனர். இதையடுத்து சட்டவிரோதமாக ஆயுதங்கள் பதுக்கிய வழக்கில் பெங்களூரு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

அதன்பின், கவுரி லங்கேஷ் கொலைக்கும், நவீன் குமாருக்கும் இடையே தொடர்புகள் இருப்பதை போலீசார் பல்வேறு ஆதாரங்கள் மூலம் உறுதி செய்தனர். மேலும், கவுரி லங்கேஷ் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் அவரின் வீட்டுப் பகுதியில் பைக்கில் சென்ற நபரின் முகமும், நவீன்கு மாரின் முகமும் ஒத்துப்போவதை போலீசார் கண்காணிப்பு கேமிரா மூலம் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, நவீன்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கும் கவுரி லங்கேஷ் கொலைக்கும் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். இதை பெங்களூரு கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் முன் சிறப்பு புலனாய்வு போலீஸார் அளித்தனர். மேலும், போலீஸ் காவலில் 8 நாள் எடுத்து விசாரணை நடத்தவும் நீதிபதி நேற்று அனுமதியளித்தார்.

எப்படி கைதானார்?

இந்து யுவசேனா உறுப்பினர் நவீன் குமார் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் 7.65 எம்.எம். துப்பாக்கி குண்டுகள் 15 ரவுண்டுகள் சுடக்கூடிய அளவுக்கு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் 7.65 எம்.எம். குண்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த குண்டுகள் நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடியவை என்பதால், போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது.

மேலும், கவுரி லங்கேஷ் கொல்லப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன் அவர் வீட்டுக்கு அருகே பைக்கில் ஹெல்மெட் அணிந்து ஒருவர் சென்றது கண்காணிப்பு கேமிராவில் பதிவானது. இந்த புகைப்படத்தையும், கைது செய்யப்பட்ட நவீன்குமாரின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்ததில் இருவரின் முகத்தின் அடையாளமும்சரியாக இருந்தது. இதையடுத்து, போலீஸார் விசாரணையை துரிதப்படுத்தி கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x