Last Updated : 28 Mar, 2018 01:35 PM

 

Published : 28 Mar 2018 01:35 PM
Last Updated : 28 Mar 2018 01:35 PM

திரைக்கு வரும் முன்பே சர்ச்சையில் சிக்கிய ‘எஸ் துர்கா’ மலையாளப்படம் - ஏப்ரல் 6ம் தேதி ரிலீஸ்

திரைக்கு வரும் முன்னரே சர்ச்சைகளில் சிக்கிய மலையாளத் திரைப்படம் எஸ்.துர்கா வரும் ஏப்ரல் 6ல் ரிலீஸ் செய்யப்படுவதாக இயக்குநர் சனல் குமார் சசிதரன் தெரிவித்தார்.

படம் கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) எஸ்.துர்கா திரைப்படம் திரையிடப்பட்டதற்காக நிறைய சர்ச்சைகள் உருவாயின. தற்போது பல தடைகளை மீறி அப்படம் திரைக்கு வருகிறது.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு திரைப்படம் வெளியாவது குறித்து அவரது உணர்வைப் பற்றி கேட்டபோது, ​​

இயக்குநர் சனல்குமார் சசிதரன்,

"மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தற்போது சர்ச்சைகளினால் ஏற்பட்ட சிரமங்கள் எல்லாம் ஓய்ந்துவிட்டன. தேவையற்ற அந்த சர்ச்சைகளுக்கு என்ன காரணம்.

தற்போது மக்கள் படம் பார்ப்பதற்கான நேரம் வந்துவிட்டது. யார் எதிர்க்கிறார்கள் யார் ஆதரிக்கிறார்கள் என்பது பற்றி கவலைவேண்டாம். எந்த முன்முடிவும் நிபந்தனைகளுமின்றி தயவுசெய்து பொதுமக்கள் அனைவரும் படத்தைக் காணவேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இத்திரைப்படம், 53வது பெசாரோ திரைப்படவிழா, ரோட்டர்டாம் திரைப்படவிழா, வாலென்சியா திரைப்படவிழா உள்ளிட்ட உலக அளவிலான பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்பெயின் மற்றும் ஜியோ மாமி திரைப்பட விழாக்களிலும் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.

இயக்குநர் சசிதரன் சனல்குமார் இப்படத்தை செக்ஸி துர்கா என்ற பெயரில்தான் முதலில் எடுத்தார். இப்பெயரே மிகவும் சர்ச்சைக்குள்ளானது. அதனால் திரைப்பட தணிக்கை வாரியமும் படத்திற்கு தடை விதித்தது. பின்னர் இயக்குநர் சசிதரன் சனல்குமார் இப்படத்திற்கு ''எஸ்.துர்கா'' என்று பெயர் மாற்றினார். அதன்பிறகும் கூட சிக்கல் நீடித்தது.

நீதிமன்றத்திற்கு மனு செய்து இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்றமும் இப்படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை என்று

கூறியது. ஆனால் பலமான சர்ச்சைகள் எழுந்ததால் இப்படத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டாத நிலையில் ரசிகர்களின் முயற்சியால் அச்சிக்கலும் தீர்ந்து

தற்போது இத்திரைப்படம் ஏப்ரல் 6க்கு திரைக்கு வருகிறது. இத்திரைப்படத்தில் ராஜஸ்ரீ தேஷ்பாண்டே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கேரள மாநிலத்திலேயே இத்திரைப்படம் திரையிடப்படாத நிலை மாறி, தற்போது இந்தியா முழுவதிலும் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x