Last Updated : 31 Mar, 2018 08:58 PM

 

Published : 31 Mar 2018 08:58 PM
Last Updated : 31 Mar 2018 08:58 PM

பசுவதை பேசும் பாஜக: மோடியின் ஆட்சியில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 2-ம் இடம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

 

பசுவதை தடைச் சட்டம் பற்றி பாஜகவினர் பேசி வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்து, சர்வதேச அளவில் 2-ம் இடத்தில் இந்தியா இருக்கிறது என்று கர்நாடக மாநில அமைச்சர் ராமலிங்கா ரெட்டி விமர்சித்துள்ளார்.

பாஜக தலைவர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கர்நாடக மாநிலம் வந்துபோது, மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டு வருவோம் எனப் பேசினார்கள்.

இதைக் குறிப்பிட்டு கர்நாடக அமைச்சர் ராமலிங்கா ரெட்டி பெங்களூரில் இன்று பேசினார். அவர் கூறியதாவது:

பாஜகவினர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கர்நாடக மாநிலத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டுவருவோம் என்று பேசுகிறார்கள். ஒரு உயிரனத்தைக் கொல்வது தவறுதான் அதை ஏற்கிறோம்.

ஆட்சிக்கு வந்தால், பசு வதையைத் தடுப்பேன் என்று கூறும் பாஜகவினர், வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதியைத் தடை செய்வார்களா? மற்ற நாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவார்களா?

கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் ஆட்சியில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் அரசு முன்னணியில் இருந்து வருகிறது.

பாஜகவினர் உண்மையிலேயே பசுவை நேசிப்பவர்கள் என்றால், முதலில் அவர்கள் மாட்டிறைச்சி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வதேச அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பிரேசில் இருக்கிறது. 3-ம்இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.

கடந்த 2015-16ம் ஆண்டில், மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம் ரூ.26 ஆயிரத்து 682 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் 26 ஆயிரம் கோடி ஏற்றுமதியாகி இருக்கும் நிலையில், ஏற்றுமதியை கைவிடுவார்களா. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் மோடியின் அரசு ஆண்டுக்கு 14 சதவீதம் வளர்ச்சி அடைந்துவருவதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு புள்ளிவிவரத்தோடு தெரிவிக்கிறது.

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிராவில் ஏராளமான மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்கள், மாட்டிறைச்சி பதப்படுத்தும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் ஏராளமான பாஜக தலைவர்கள் பங்குதாரர்களாக இருந்து கொண்டு நடத்தி வருகின்றனர்.

பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் நாள்தோறும் 50 டன் மாட்டிறைச்சி பயன்படுத்தப்படுகிறது.வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசியல் காரணங்களுக்காக அங்கு மாட்டிறைச்சியை தடை செய்ய விரும்பவில்லை.

பாஜகவினர் நாடகம் நடத்துகிறார்கள். அவர் தடை செய்ய வேண்டுமென்றால், ஒட்டுமொத்த விலங்கினங்கள் கொல்வதையும் தடை செய்ய வேண்டும். அதை முழுமையாக வரவேற்கிறோம். முதலில் இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதை பாஜகவினர் நிறுத்தவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ராமலிங்கா ரெட்டி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x