Last Updated : 02 Mar, 2018 11:52 AM

 

Published : 02 Mar 2018 11:52 AM
Last Updated : 02 Mar 2018 11:52 AM

மருத்துவமனையின் அலட்சியத்தால் சடலத்தை தோளில் தூக்கிச் சென்ற கொடுமை: மருத்துவர்கள் மீது நடவடிக்கை ?

 

உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துமவனை ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததால், உறவினரின் சடலத்தை இளைஞர் தோளில் சுமந்து சென்ற கொடூரம் நடந்தது. இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள பெஹ்ஜோய் அரசு மருத்துவமனையில் சுரஜ்பால் என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை எடுத்துக் செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து தருமாறு உறவினர் கோபிச் சந்த் மருத்துவர்களிடம் சென்று கேட்டார். ஆனால், அவர்கள் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரவில்லை.

இதுகுறித்து கோபிச்சந்த் கூறுகையில் ‘‘எனது உறவினர் சுரஜ்பாலுக்கு வேலை செய்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார். அவரது உடலை வீடு கொண்டு வந்த சேர்க்க ஆம்புலன்ஸ் கேட்டும் கிடைக்கவில்லை.

அரசு மருத்துவமனை ஊழியர்கள் உதவவில்லை. உடலை தூக்கிச் செல்ல ஸ்ட்ரக்சர் மட்டுமாவது தருமாறு கோரினோம். ஆனால் உடலை எடுத்துக் கொண்டு உடனடியாக வெளியேறுமாறு மருத்துவமனை ஊழியர்கள் எங்களை விரட்டினர். இதனால் வேறு வழியின்றி சடலைத்தை எனது தோளில் தூக்கிக் கொண்டு வந்தேன்’’ எனக்கூறினார்.

இதையடுத்து, இறந்தவரின் உடலை சுமந்தபடியே கோபிச்சந்த் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே வீடு சென்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலை தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

துணை ஆட்சியர் பிரீத்பால் சிங் நடத்திய விசாரணையில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இரு மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர் ஆகியோர் தங்கள் பணியை சரிவர செய்யவில்லை என தெரிய வந்துள்ளது.

அந்த மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இல்லை. எனினும் சம்பல் அரசு மருத்துவமனையில் அப்போது ஆம்புலன்ஸ் இருந்துள்ளது. அதனை வரழைத்து கோபிசந்துக்கு மருத்துவர்கள் உதவவில்லை. இதையடுத்து இரு மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு, மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x