Published : 10 Sep 2014 11:34 AM
Last Updated : 10 Sep 2014 11:34 AM

ஜம்மு-காஷ்மீர் வெள்ளம்: பலி 220 ஆக அதிகரிப்பு; இதுவரை 76,000 பேர் மீட்பு

ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 76,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 220 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பசியில் தவிக்கும் ராணுவத்தினர் குடும்பங்கள்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணியில் மும்முரமாக முப்படையினரும் ஈடுபட்டுவரும் நிலையில், ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் 1,000 பேர் உதவியின்றி தவித்து வருகின்றனர்.

சீறிப்பாயந்த ஜீலம் நதி காஷ்மீரையே புரட்டிப்போட, தெற்கு, மத்திய காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம்கள் பல வெள்ளத்தல் சூழப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள மத்திய, தெற்கு காஷ்மீர் பகுதிகளில் மட்டும் 20 ராணுவ முகாம்கள் இருக்கின்றன. இந்த முகாம்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது, தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முகாம்களில் இருக்கும் உணவுப் பொருட்கள் பெரும்பான்மை பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாதுகாக்கப்பட்டுள்ளதால், போதிய அளவு உணவுப் பொருட்கள் இல்லாமல் ராணுவத்தினர் குடும்பங்கள் தவித்து வருகின்றனர்.

இது குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட 1000 பேர் இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் உணவு, தண்ணீர் இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்" என்றார்.

76,000 பேர் மீட்பு

காஷ்மீரில் பெய்த கன மழை காரணமாக சிந்து நதியின் கிளை நதியான ஜீலம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வரலாறு காணாத பெருவெள்ளத்தில் மாநிலமே கடும் பாதிப்புக்குள்ளானது.

தற்போது அங்கு மழை குறைந்துள்ளது, வெள்ளம் வடிந்து வருகிறது. ராணுவம் உள்ளிட்ட மீட்புப் படையினரால் இதுவரை 76,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 220 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகே நீரில் மூழ்கிய பகுதிகளுக்குச் செல்ல முடியும். அப்போதுதான் பலி எண்ணிகையை துல்லியமாக உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டுவந்த பலர் தாங்கள் அனுபவித்த துயரத்தை விவரித்தனர். தாங்கள் மீட்கப்படும்போது அப்பகுதியில் மற்றும் சிலர் எழுப்பிய அபயக்குரல் அடங்கியது என்றும், எனவே அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

மீட்புக் குழுவினர் மீது தாக்குதல்:

இதற்கிடையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீது பொதுமக்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிறைய பேர் சிக்கியிருப்பதாகக் கூறி மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கே செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் வேறு பகுதிக்கு செல்ல திட்டமிட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் மீட்புப் படை வீரர் ஒருவரது கை பலமாக பாதிக்கப்பட்டது. காயமடைந்த வீரர் சிகிச்சைக்காக சண்டிகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "மீட்புக் குழுவினர் மீது மக்கள் ஆங்காங்கே தாக்குதல் நடத்திவருவது வருத்தமளிக்கிறது. மீட்புக்குழுவினருக்கான பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்" என்றார்.

இதற்கிடையில் ஜம்மு - காஷ்மீரில் நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர் ஓ.பி.சிங்கை காஷ்மீர் செல்லுமாறு அரசு பணித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x