Published : 05 Mar 2018 08:40 AM
Last Updated : 05 Mar 2018 08:40 AM

தேசிய மக்கள் கட்சி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சிகளுடன் இணைந்து மேகாலயா, நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி: அந்தந்த மாநில ஆளுநர்களிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினர் கான்ராட் சங்மா, நிபியூ ரியோ

மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியுடனும் நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடனும் இணைந்து, பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. கான்ராட் சங்மா, நிபியூ ரியோ ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

மேகாலயாவில் 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 59 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், முதல்வர் முகுல் சங்மா தலைமையிலான ஆளும் காங்கிரஸ் 21 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முன்னாள் மக்களவை தலைவர் பி.ஏ.சங்மா மகன் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதுதவிர, டோங்குபர் ராய் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கட்சி (யுடிபி) 6 தொகுதிகளிலும் மக்கள் ஜனநாயக முன் னணி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தனித்து போட்டியிட்ட பாஜக 2 தொகுதிகளில் வென்றது. சுயேச்சைகள் உட்பட சிறிய கட்சிகள் 7 இடங்களில் வெற்றி பெற்றன.

மேகாலயாவில் ஆட்சி அமைக்க 31 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், யாருக் கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயன்றது. ஷில்லாங் நகரில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களான அகமது படேல், கமல் நாத், முகுல் வாஸ்னிக் மற்றும் சி.பி. ஜோஷி ஆகியோர் நேற்று முன்தினம் இரவே ஆளுநர் கங்கா பிரசாத்தை சந்தித்து, காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

கிங் மேக்கர்

இதனிடையே 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ள என்பிபி மற்றும் இதர சிறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டது. அந்த வகையில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்று கிங் மேக்கராக உருவெடுத்துள்ள யுடிபி தலைவர் டோங்குபர் ராயை, பாஜகவின் வடகிழக்கு மாநிலங்களுக்கான மூத்த தலைவரும் அசாம் நிதி அமைச்சருமான ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று சந்தித்து ஆதரவு கோரினார். அதேநேரம் காங்கிரஸ் சார்பில் முகுல் சங்மாவும் ராயை சந்தித்து ஆதரவு கோரினார். ஆனால், என்பிபி தலைமையில் ஆட்சி அமைய ஆதரவு தருவதாக ராய் அறிவித்துள்ளார். மேலும் சுயேச் சை உள்ளிட்ட சிறு கட்சிகளும் என்பிபி-க்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன. இதனால் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முதல்வர் அகதா சங்மா?

இதையடுத்து, என்பிபி தலைவர் கான்ராட் சங்மா தனது கட்சி எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுநர் கங்கா பிரசாத்தை நேற்று மாலை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்க என்பிபி-க்கு அழைப்பு விடுத்துள்ளார். கான்ராட் சங்மாவோ அல்லது அவரது சகோதரியும் முன்னாள் மத்திய அமைச்சருமான அகதா சங்மாவோ முதல்வராக தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகதா தேர்ந்தெடுக்கப்பட்டால் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமை யை பெறுவார். நாளை காலை 10.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

நாகாலாந்து முதல்வர் ரியோ

60 உறுப்பினர்களை கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைக்கு வடக்கு அங்கமி-2 தொகுதி உறுப்பினராக தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) மூத்த தலைவர் நிபியூ ரியோ போட்டியின்றி ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே 59 தொகுதிகளுக்கு நடந்த தேர்த லில் ஆளும் நாகா மக்கள் முன் னணி (என்பிஎப்) 27 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் என்டிபிபி-பாஜக கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

05chkan_conradsangma கான்ராட் சங்மா

இந்நிலையில், தேர்தல் ஆணைய செயலாளர் அர்விந்த் குமார் நேற்று கூறும்போது, “டென்னிங் தொகுதியில் என்டிபிபி வேட்பாளர் நாம்ரி சாங் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இந்தத் தொகுதியில் என்பிஎப் வேட்பாளர் என்.ஆர்.ஜெலியாங் வெற்றி பெற்றதாக தேர்தல் அதி காரி தவறுதலாக அறிவித்துவிட் டார்” என்றார்.

பலம் அதிகரிப்பு

இதையடுத்து, ஏற்கெனவே போட்டியின்றி வெற்றி பெற்ற ரியோவையும் சேர்த்து என்டிபிபி-பாஜக கூட்டணியின் பலம் 30 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர ஒரு சுயேச்சை எம்எல்ஏ மற்றும் ஐக் கிய ஜனதா தளம் கட்சியின் ஒரு எம்எல்ஏ ஆகியோரும் ஆதரவளித்துள்ளதால் என்டிபிபி-பாஜக கூட்டணி பலம் 32 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தேசிய மக்கள் கட்சி பாஜக கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது. அதேநேரம் என்பிஎப் பலம் 26 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து, என்டிபிபி -பாஜக கூட்டணி சார்பில் நிபியூ ரியோ முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இவர் ஏற்கெனவே 3 முறை முதல்வராக பதவி வகித்துள்ளார்.

நிபியூ ரியோ நாகாலாந்து ஆளுநர் பி.பி.ஆச்சார்யாவை நேற்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, தனக்கு 32 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, என்டிபிபி தலைவர் சிங்வாங் கோன்யக், பாஜக நாகலாந்து மாநில தலைவர் விசாசோலி லூங்கு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் ஆளுநர் ஆச்சார்யா கூறும்போது, “ரியோவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அவர் ஆட்சி அமைக்க வேண்டும். அதேநேரம் அனைத்து எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x