

டெல்லியில் மீண்டும் சட்டசபை தேர்தலை சந்திக்க பாஜக தயக்கம் காட்டுவதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளனர்.
டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுக்கலாம் என துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில் இந்தக் கருத்துக்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறும்போது, “டெல்லியில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானபோதும், இப்போதும் பாஜக தனிம்பெரும் கட்சியாக உள்ளது. ஆனால் இப்போது அரசியல் சூழ்நிலை மாறி உள்ளது. சட்டசபை தேர்தலை சந்திக்க, அதாவது மீண்டும் மக்கள் முன்பு செல்வதற்கான நம்பிக்கையை பாஜக இழந்து விட்டது. பாஜக தலைமையிலான மத்திய அரசின் திறமையற்ற ஆட்சியே இதற்கு முக்கியக் காரணம்” என்றார்.
குதிரைபேர ஆட்சி
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோதியா கூறும்போது, “மக்களவைத் தேர்தலின்போது மோடி அலையால் வெற்றி பெற்றோம் எனக் கூறிவர்கள், டெல்லியில் மீண்டும் சட்டசபை தேர்தலை சந்திக்க தயங்குகிறார்கள். இந்தச் சூழலில் குதிரைபேரம் நடத்திதான் அவர்களால் ஆட்சி அமைக்க முடியும். அப்படி அமையும் ஆட்சியால், விலைவாசி உயர்வு மற்றும் மின்சார பற்றாக்குறையை எப்படி சரிசெய்ய முடியும்?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
பின்னணி
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸின் 8 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் முதல்வரானார் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால். லோக்பால் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் ஆதரவளிக்கவில்லை எனக் கூறி 49 நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், டெல்லியில் குடியரசுதலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, பாஜகவைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் எம்பியாகி விட்டதால், டெல்லி சட்டசபையின் மொத்த உறுப்பினர்கள் எண் ணிக்கை 70-லிருந்து 67 ஆகக் குறைந்து விட்டது. இதன்படி ஆட்சி அமைக்க 34 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இப்போது பாஜக வுக்கு கூட்டணியை சேர்த்து 29 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. இதனுடன், சுயேச்சை உறுப்பினரான ராம் வீர் ஷோக் மற்றும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு பாஜகவுக்கு ஆட்சி அமைக்க உதவும் எனக் கருதப்படுகிறது.
பிரணாப் பரிந்துரை
அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் கடந்த வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரை செய்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு உள்துறை அமைச்சகத்தை பிரணாப் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாஜக தலைவர்கள் ஆலோசனை
டெல்லி மாநில பாஜக தலைவர் சத்தீஷ் உபாத்யாய், துணைத்தலைவர் பிரபாத் ஜா, தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான நித்தின் கட்கரி ஆகியோர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து டெல்லி நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர். இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ராஜ்நாத் சிங், “ஆட்சி அமைப்பது பற்றி கட்சி முடிவு செய்யும்” என பதிலளித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, வரும் செப்டம்பர் 9-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அதற்குள் டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.