Last Updated : 31 Mar, 2018 03:38 PM

 

Published : 31 Mar 2018 03:38 PM
Last Updated : 31 Mar 2018 03:38 PM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

 

கடந்த மாதம் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமா என்றும், அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கூடுதலாக 3 மாதங்கள் கால அவகாசம் தேவை என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை காரணமாகக் காட்டி 3 மாதங்கள் அவகாசத்தை மத்திய அரசு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, ஸ்கீம் (scheme) என்ற வார்த்தைக்கு தெளிவாக விளக்கம் தேவை என்றும், கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எந்த அறிவிக்கை வெளியிட்டாலும், அது தீவிரமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

நடுவர் மன்றம் வழங்கியுள்ள இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ‘ஸ்கீம்’ (செயல்திட்டம்) ஒன்றை 6 வார காலத்துக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

ஆனால், ஸ்கீம் என்ற வார்த்தையின் முழுப்பொருள் காவிரி மேலாண்மை வாரியம் , ஒழுங்குமுறைக்குழு அமைக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாகும். இதே அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அரசியல்கட்சிகளும், விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் போராடி வருகின்றனர்.

ஆனால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறிய ஸ்கீம் என்ற வார்த்தைக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்று பொருள் கிடையாது என்று கர்நாடக அரசும் பிடிவாதம் செய்கிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் காவிரி மேம்பாட்டு வாரியம் அமைக்க விதித்திருந்த கெடு 29-ம் தேதியுடன் முடிந்தது.

இந்நிலையில் சட்ட அமைச்சகம், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆகியோரிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. அதில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு தீர்ப்பில் தெளிவான விளக்கம் கொடுக்கப்படாத காரணத்தால், அது குறித்து விளக்கம் கேட்டு மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களும் மாறுபட்ட கருத்துக்களை கூறுகிறார்கள்.

குறிப்பாக ஸ்கீம் என்ற வார்த்தைக்கு கர்நாடகமும், தமிழகமும் இருவேறு பட்ட அர்த்தங்களைக் கூறுகிறார்கள. மத்திய அரசு மூலம் எந்தவிதமான செயல்திட்டம் உருவாக்கினாலும், மீண்டும் மாநிலங்கள் நீதிமன்றத்தை நாடும்.

மேற்கொண்டு மாநிலங்கள் நீதிமன்றத்தை நாடாமல் இருப்பதற்காக, ஸ்கீம் என்ற வார்த்தைக்கு தெளிவான விளக்கத்தையும், வாரியத்தின் பணிகள், எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் தேவைப்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. காவிரி விவகாரம் என்பது மிகவும் உணர்வுப்பூர்வ பிரச்சினையாகும். கடந்த காலங்களில் இருந்து அவ்வாறு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில் கடந்த காலங்களில் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மனித உயிர்களும் பலியாகியுள்ளன, ஏராளமான சொத்துகளும் நாசமாக்கப்பட்டுள்ளன.

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி, செயல்திட்டத்தை, (ஸ்கீம்)காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டுமா என்பதையும் உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தவேண்டும். அவ்வாறு தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றாலும் கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.

மேலும், தீர்ப்பாயம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமா, அந்த வாரியத்தில் நிர்வாக, தொழில்நுட்பக் கூறுகளை மாற்றியமைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்காக 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களையும் அழைத்துப் பேசி இருக்கிறோம். அதில் 4 மாநிலங்களின் பிரதிநிதிகளும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறது.

ஆனால், கர்நாடக மாநிலம் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அல்ல என்று தெரிவிக்கிறது.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x