Published : 08 Sep 2014 06:08 PM
Last Updated : 08 Sep 2014 06:08 PM

காஷ்மீர் கனமழை துயரம்: உதவிக்கு சமூக வலைதளங்களை நாடும் மக்கள்

ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உறவினர்களை தொலைத்தவர்கள், வெள்ளத்தில் சிக்கியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் தங்களது பிரச்சினைகளை சமூக வலைதளங்களின் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீரின் பல மாவட்டங்களை தண்ணீர் சூழ்ந்து, பெரும்பாலான நகரங்கள் நீர் பரப்பாக காட்சியளிக்கின்றன. மாநில தலைநகரில் உள்ள விமான நிலையம், தலைமை செயலகம், முக்கிய அரசு கட்டிட வளாகங்கள் ஆகியன மூழ்கியுள்ளன. உதவி கேட்க முடியாத அளவில் மக்கள் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய மக்கள், உதவி கேட்கவும், ஆபத்தில் இருப்பது குறித்து அறிவிக்கவும் சமூக வலைதளங்களை நாடிவருகின்றனர். வெள்ளத்தால் மூழ்கிய தங்களது பகுதிகளை படம் எடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

தலைநகர் ஸ்ரீநகர் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. அங்கு உள்ள தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம் ஆகிய முக்கிய அரசு கட்டிடங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

அந்த நகரத்தின் ராணுவ கன்டோன்மென்ட் பகுதியும் வெள்ளதால் மூழ்கியதை அடுத்து அந்த இடத்திற்கு மீட்பு படையினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பல இடங்களில் தொலைப்பேசி சேவைகள் துண்டிக்கப்பட்டதால், ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் நூற்றுக்கணக்கானோர் தங்களது நிலைமை குறித்து அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.

இதனால் ட்விட்டர் ட்ரெண்டிங்கில், காஷ்மீர் வெள்ளம் (#KashmirFloods) என்ற ஹாஷ்டேக் முன்னிலை வகிக்கிறது.

ட்விட்டரில் அன்கூர் ரெய்னா என்பவர், "என் பெற்றோர் ராணுவ கன்டோன்மென்ட் பகுதியில் சிக்கியுள்ளனர். அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. யாராவது உதவுங்கள்" என்று கூறியுள்ளார்.

"இந்திய ராணுவத்தின் சேவை பாராட்டிற்குரியது. 130 ராணுவ துருப்புகள் இதுவரை எங்கள் பகுதியில் 14,800-க்கும் அதிகமானவர்களை காப்பாற்றியுள்ளனர். அவர்களுக்கு நன்றி." என்று ஜானக் டேவ் ட்விட்டரில் கூறியுள்ளார்.

பிஹாரை சேர்ந்த பாஜக எம்.பி. சத்ருஹன் சின்ஹா, "இந்திய ராணுவத்தினர் பெருமைக்குரியவர்கள். அவர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து கூட கவலைப்படாமல் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர்" என்று கூறியுள்ளார்.

மேலும், தங்களது உறவினர்களை தொலைத்த சிலர், தங்களது உறவினர்களின் பெயர்களை குறிப்பிட்டு, எப்படியாவது தொடர்பு கொள்ளுங்கள் என்று ஃபேஸ்புக்கில் பகிர்வு இடுகின்றனர்.

"லாலா ரூக் ஹோட்டலில் இரண்டு அடுக்கு மாடி முற்றிலும் இடிந்து விழுந்தது. யாராவது உதவுங்கள். அவசர நிலை" என்பது போன்ற பல பகிர்வுகளை பேஸ்புக்கில் சிலர் பதிவிட்டு உதவி கேட்டு வருகின்றனர்.

இதைத் தவிர, வெள்ள பாதிப்பிற்கு உதவ நிதியுதவி, துணிகள், போர்வைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டி தன்னார்வு இயக்கங்கள் சில ஃபேஸ்புக் மூலம் உதவி கேட்டு வருகின்றனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில், கடந்த 5 நாட்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 175-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5,250-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் நிலையை கண்டறிந்து மத்திய அரசு, அங்கு தேசிய இயற்கை பேரிடர் ஏற்பட்டதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x