Last Updated : 28 Mar, 2018 05:44 PM

 

Published : 28 Mar 2018 05:44 PM
Last Updated : 28 Mar 2018 05:44 PM

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்சினையை எழுப்புவதை குறைகூறாதீர்கள்: பிரதமர் மோடிக்கு குலாம்நபி ஆசாத் பதிலடி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்சினைகளை எழுப்பி குரல்கொடுப்பதை குறையாக எடுத்துக் கூறக்கூடாது. அது அவர்களின் உரிமை என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் கடுமையாகப் பேசினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் அமர்வு தொடங்கியதில் இருந்து பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.க்களும், தெலங்கானா மாநிலத்தில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி டிஆர்எஸ் கட்சி எம்.பிக்களும் தொடர்ந்து அவையை முடக்கி வருகின்றனர்.

வங்கிமோசடி தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கேட்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டனர்.

அவையை நடத்தவிடாமல் எம்பிக்கள் செய்யும் அமளியை பிரதமர் மோடி, மாநிலங்கள் அவை தலைவர் வெங்கய்யா நாயாடு ஆகியோர் கண்டித்தனர். இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று பேசுகையில், எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்றம் முடங்கிறது. ஆக்கப்பூர்வ வாதம் ஏதும் நடக்கவில்லை என்று வேதனை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மாநிலங்களவையில் தங்களின் பதவிக்காலம் முடிந்து 60 எம்.பி.க்கள் அடுத்த சில வாரங்களில்விடை பெறுகிறார்கள். இவர்கள் குறித்து மாநிலங்கள் அவையில் உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது, பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கும், பேச்சுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் பேசினார். அவர் கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மக்களின் பிரச்சினைகளுக்காக மட்டுமே குரல் கொடுக்கிறார்கள். அவ்வாறு குரல் கொடுத்து பேசுவதும்,போராடுவதும் அவர்களின் உரிமையாகும்.

ஜனநாயகம் என்பது நாடாளுமன்றத்தில்தான் வாழ்கிறது. எங்களின் போராட்டம் என்பது ஒருபோதும் மாநிலங்களவை தலைவருக்கு எதிராகவோ அல்லது குறிப்பிட்ட சிலருக்கு எதிரானதாகவோ அமைந்திருக்கவில்லை. எங்களின் போராட்டம் அரசியல்ரீதியானதும் இல்லை. எங்களுடைய சக உறுப்பினர்களுக்கு எதிராகவும் நாங்கள் இல்லை.

பல்வேறு முக்கிய பிரச்சினைகள் மக்களை பாதித்து வருகின்றன. அவற்றை மட்டுமே அந்த அவையில் நாங்கள் எழுப்புகிறோம்.

நான் இந்த நாட்டுக்கு சொல்லவிரும்புவதெல்லாம், நாட்டில் ஜனநாயகம் உயிர்வாழ்கிறது என்றால், அது நாடாளுமன்றம் இருப்பதால் மட்டுமே. ஆதலால், மக்களின் பிரச்சினைகளை இங்கு எழுப்ப எங்களுக்கு உரிமை இருக்கிறது.

இங்கு நடக்கும் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான போராட்டம், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் போராட்டம் ஆகியவை அனைத்தும் மக்களுக்கானது. எந்த உறுப்பினரும் சுயநலத்துடன் அல்லது வேறு எந்தவிதமான உள்நோக்கத்துடன் இங்கு பிரச்சினை செய்யவில்லை.

ஆனால், சில ஊடகங்கள் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை மாநிலங்களவைத் தலைவருக்கு எதிரானது என்பதுபோல் சித்தரிக்கின்றன. அதுதவறு.

நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குகின்றன என்ற குற்றச்சாட்டும் தவறானது. இங்குள்ள உறுப்பினர்கள் மக்களுக்காக தங்களின் தொகுதிக் கதவுகளை 24 மணி நேரமும் திறந்துவைத்து இருப்பார்கள். அதிகாரிகளைப் போல் அலுவலக நேரத்தில் மட்டும் மக்களை எம்.பி.க்கள் சென்று பார்ப்பதில்லை.

ஏழைமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் உள்ளிட்ட பிரிவினரின் தேவைக்காகவே, அவர்கள் சார்பாகவே இங்கு நாங்கள் போராடுகிறோம். எங்கள் குரலை உயர்த்துகிறோம். எம்.பி.க்கள் அவர்களின் நலனுக்காக குரலை உயர்த்தி கோஷம்போடவில்லை.

இப்போது மத்தியில் ஆளும் கட்சிகூட எதிர்க்கட்சியாக இருந்தபோது, இதேபோன்று செய்தது என்பது நினைவில் இருக்கட்டும்.

இவ்வாறு குலாம்நபி ஆசாத் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x