புனேயில் பயங்கரம்: ஒரு தலைக்காதலால் விளைந்த பொறாமை; 10-ம் வகுப்பு மாணவர் குத்திக் கொலை

புனேயில் பயங்கரம்: ஒரு தலைக்காதலால் விளைந்த பொறாமை; 10-ம் வகுப்பு மாணவர் குத்திக் கொலை
Updated on
1 min read

புனேயில் உள்ள நிக்டி பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தினால் குத்திக் கொல்லப்பட்ட பயங்கரச் சம்பவம் நடந்துள்ளது.

திங்கள் நள்ளிரவு இந்தப் பயங்கரக் கொலை நடந்துள்ளது என்று தெரிவித்த போலீஸார் இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளது.

கொல்லப்பட்ட மாணவர் நிக்டி அம்ரிதா வித்யாலயம் பள்ளியில் 10-ம் வகுப்புப் படித்து வந்தார். இவர் பூர்ணாநகர் சிஞ்ச்வாத் பகுதியில் வசிப்பவர். இவர் பரீட்சைக்காக படித்து வந்தார்.

தன்னுடைய வீட்டில் அன்றைய தினம் தன் வகுப்பைச் சேர்ந்த மாணவியுடன் அவர் படித்துக் கொண்டிருந்தார். பிறகு அந்த மாணவியை அவரது வீட்டில் கொண்டு விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். மாணவியை இறக்கி விட்டு வரும்போது கொல்லப்பட்டுள்ளர்.

இது குறித்து நிக்டி போலீஸ் நிலைய மூத்த காவலதிகாரி விஜயகுமார் பல்சுலே கூறும்போது, “இதுவும் ஒருதலைக்காதல் விவகாரமாகத் தெரிகிறது. கொல்லப்பட்ட மாணவர் மீது அந்த மாணவியை ஒருதலையாகக் காதலித்தவருக்கு கடும் பொறாமை இருந்துள்ளது. இதனையடுத்து அன்று மாணவையை அவரது வீட்டில் கொண்டு வந்து விட்டுத் திரும்பும்போது அவரைத் தாக்கிக் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. கொல்லப்பட்ட பையனின் கழுத்து, தலையில் பயங்கர அடிபட்டிருந்தது, ரத்த வெள்ளத்தில் அந்த மாணவர் கிடந்தார். மாணவரை உடனடியாக பிம்ப்ரி ஒய்சிஎம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்துவிட்டது” என்றார்.

24 மணிநேரத்தில் 2வது சம்பவம்:

கடந்த 24 மணிநேரத்தில் இது 2வது இத்தகைய சம்பவமாகும். இதே திங்களன்று 11-ம் வகுப்புப் படிக்கும் மாணவர் ஒருவரை அவரது வகுப்புச் சகாக்களே கடுமையான ஆயுதங்கள் மூலம் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்திலும் கழுத்திலும் தலையிலும் அடிபட்ட இந்த மாணவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். வகுப்பில் இருந்த போது பொய் சொல்லி மாணவரை அழைத்துத் வராண்டாவில் தாக்கியுள்ளனர்.

தற்போது 10-ம் வகுப்பு மாணவர் கொல்லப்பட்டதும், சிறுவயதில் ஒருதலைக்காதலும், அதனால் விளைந்த பொறாமையும், அதன் பலனாக நடந்தேறிய பயங்கரக் கொலையும் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in