Published : 12 Mar 2018 09:26 AM
Last Updated : 12 Mar 2018 09:26 AM

ஜனவரி 1-க்குப் பிறகு 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்வதற்கு அனுமதிக்கலாமா?- தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு யோசனை

‘‘பதினெட்டு வயதை அடைந்தவுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்ய ஆண்டு முழுவதும் அனுமதி வழங்குவது சாத்தியமா?’’ என்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் மத்திய அரசு கேள்வி எழுப்பி உள்ளது.

தற்போது ஜனவரி 1-ம் தேதி 18 வயதை அடைந்தவர்கள் மட்டும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்கள் 18 வயதை அடைந்தாலும், உடனடியாக வாக்காளராகப் பதிவு செய்ய முடியாது. அதற்கு அடுத்த ஆண்டுதான் தங்களை வாக்காளராகப் பதிவு செய்ய முடியும்.

இந்தப் பிரச்சினையை தீர்க்க ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 என 4 தேதிகளை நிர்ணயிக்கலாம். இதன் மூலம் ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு பிறந்து 18 வயதை பூர்த்தியடைபவர்கள் எளிதாக வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள முடியும் என்று தலைமை தேர்தல் ஆணையம் ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது.

ஆனால், 4 தேதிகளுக்குப் பதில் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 என 2 தேதிகளை நிர்ணயிப்பது நல்லது என்று கடந்த 2016-ம் ஆண்டு மத்திய சட்டத் துறை அமைச்சகம் கூறியது. அதற்கேற்ப வாக்காளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர மசோதாவும் தயாரிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்கள் எப்போது 18 வயதை பூர்த்தியடைந்தாலும், உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆண்டு முழுவதும் அனுமதிக்கலாமா?

இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா என்று தலைமை தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு கேட்டுள்ளது.

ஆண்டுதோறும் 18 - 19 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் ஒரு கோடி பேர் சராசரியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கின்றனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x