Published : 16 Mar 2018 11:20 AM
Last Updated : 16 Mar 2018 11:20 AM

தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறியது தெலுங்குதேசம்: பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் கடும் அதிருப்தியடைந்துள்ள தெலுங்கு தேசம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இன்று விலகியது. மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் அக்கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது சிறப்பு அந்தஸ்து, சிறப்பு நிதித்தொகுப்பு தரப்படும் என மத்திய அரசு வாக்குறுதி அளித்தது ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. பாஜக அரசு தாக்கல் செய்த கடைசி பட்ஜெட்டிலும் நிதித்தொகுப்பு அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தெலுங்குதேசம் கட்சிக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் கடந்த 9 நாட்களாக தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அமைச்சரவையில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரு எம்.பி.க்கள் ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், தெலுங்கு தேசம்கட்சியின் எம்பி.க்கள், எல்எல்ஏக்களுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்குதேசம் அறிவித்துள்ளது.

தெலுங்குதேசம் கட்சியின் உயர்மட்ட அரசியல் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும் நடவடிக்கையைகளை தெலுங்குதேசம் தீவிரப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மக்களவை சபாநாயகருக்கு தெலுங்கு தேசம் சார்பில் இன்று நோட்டீஸ் வழங்கப்படுகிறது. வரும் திங்களன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படலாம் என தெரிகிறது.

இது தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியிடமும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x