Last Updated : 04 Mar, 2018 09:19 AM

 

Published : 04 Mar 2018 09:19 AM
Last Updated : 04 Mar 2018 09:19 AM

25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி முடிவுக்கு வந்தது: திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி - நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் ஆட்சி அமைப்பதில் கட்சிகள் தீவிரம்

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்த லில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. நாகாலாந்து, மேகாலயாவில் யாருக் கும் பெரும்பான்மை கிடைக்காததால் பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க பாஜக தீவிர முயற்சி மேற் கொண்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளது. இதையடுத்து, திரிபுராவில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதியும் நாகாலாந்து, மேகாலயாவில் பிப்ரவரி 27-ம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. இந்த 3 மாநிலங்களிலும் தலா 60 தொகுதிகள் உள்ளன. ஆனால் தலா 59 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடந்தது.

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திடீரென காலமானார். மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். இதனால் இந்த 2 தொகுதிகளிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நாகாலாந்தின் வடக்கு அங்கமி-2 தொகுதியில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் (என்டிபிபி) தலைவர் நிபியூ ரியோ ஏற்கெனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த 3 மாநிலங்களிலும் பதி வான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திரிபுராவில் பாஜக 35 இடத்திலும் அதன் கூட்டணி கட்சியான இண்டிஜெனஸ் பீப்புள்ஸ் பிரன்ட் ஆப் திரிபுரா (ஐபிஎப்டி) 8 இடத்திலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

25 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெறும் 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முதல்வர் மாணிக் சர்க்கார் தன்பூர் தொகுதியிலும் பாஜக மாநில தலைவர் விப்லவ் குமார் தேவ் பனாம்லிபூர் தொகுதியிலும் வெற்றி பெற்றனர். கடந்த தேர்தலில் 10 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் ஒரு இடத் தில் கூட வெற்றி பெறவில்லை.

நாகாலாந்தில் பாஜக 11 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான என்டிபிபி 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கெனவே என்டிபிபி தலைவர் நிபியூ ரியோ போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். ஒரு தொகுதியில் முடிவு அறிவிப்பதில் இழுபறி நிலை காணப்பட்டது. இதன்மூலம் பாஜக கூட்டணி 27 இடங்களைப் பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 4 இடம் தேவைப்படுகிறது. ஆளும் நாகா மக்கள் முன்னணி (என்பிஎப்) 27 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதன்படி எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை (31) கிடைக்கவில்லை. எனினும் என்டிபிபி, பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனத் தெரிகிறது.

மேகாலயாவில் ஆளும் காங்கிரஸ் 21 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகன் கோன்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 19 இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும் மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எனினும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை (31) கிடைக்காததால் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டுள்ளது. அதே நேரம் என்பிபியுடன் இணைந்து ஆட்சி அமைக்க பாஜகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x